Saturday, September 26, 2009

காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்........

பயணிகளுக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்!

சென்ற வாரம் எங்களுடைய வலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் எங்களால் பயணிகளுக்கு எந்தப் பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்க்காகப் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து இந்தவாரப் பதிவை உங்களுக்காக வெளியிடுகின்றோம்.

இந்தப் பதிவில் பயணிகளுக்காக காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்களில் ஒன்றைத்தான் வெளியிட இருக்கின்றோம். அதென்ன கடைமொழி மாற்றுப் பாடல்!. ஐயம் புரிகின்றது. ஆனால் அதைக் கூறிவிட்டால் பாடலின் சுவை குறைத்துவிடும். ஆகவே அதைப்பற்றி பாடலின் முடிவில் பார்ப்போம்.

பாடல்:

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.


விளக்கம்:

கொன்றை என்பது ஒரு வகை மலர். இது சிவபெருமானின் திருவடையாள மலர். இது சிவபெருமானுக்கே உரிய மலராகும். இம்மலருக்கு "சொர்ண புஷ்பம்" என்ற ஒரு பெயரும் உண்டு. அவ்வாறு பெருமையடைய மலரை கோபாலன் (திருமால்) அணிதிருந்தார்(தரித்தான்) என்று புலவர் கூறியுள்ளார்.

கோல் என்றால் மரக்கிளையில் உள்ள குச்சி. அதாவது மூங்கில் மரக்கிளையில் உள்ளகுச்சியை எடுத்து சிவபெருமான் (நீள்சடையன்) புல்லாங்குழல் ஊதினார் என்றும் புலவர் கூறுகின்றார். அதெப்படி கண்ணன் தானே குழல் ஊதுவார் என்ற கேள்வி நம் பயணிகளுக்கு வருவது எங்களுக்குப் புரிகின்றது.

அக்கு என்றால் ருத்திராட்சம். அதாவது பொன் போன்ற ருத்திராட்சத்தை திருமால் (மாயன்) அணிந்திருந்தார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் சிவன்தானே ருத்திராட்சம் அணிவார் என்று பயணிகளுக்கு சந்தேகம் வருவது புரிகின்றது.

சிக்கல் என்பது நாகைப் பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவதலம். இங்கு சிங்காரவேலரும் மிகப் பிரபலம். வசிட்டர் சிவபெருமானை தரிசித்த தலம். அவ்வாறு பெருமையுடைய சிக்கலிலே வாழும் சிவன் பாம்பினாலான மெத்தையிலே (அரவுஅணை) கண் மூடி உறங்கினார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் திருமால் தானே பாற்கடலிலே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார் என்று பயணிகள் மனதில் நினைப்பது புரிகின்றது. ஆனால் புலவர் அவ்வாறுதானே பாடியிருக்கின்றார்.

இங்குதான் நமது புலவர் கடைமொழி மாற்றை இலாவகமாகக் கையாண்டுள்ளார். இப்பொழுது கடைமொழி மாற்று என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பாடலின் முடிவில் உள்ள கடைசி சீரையோ அல்லது கடைசி அடியையோ முதலாவதாக மாற்றிப் படித்து பொருள் காணவேண்டிய பாடல்களை கடை மொழி மாற்றுப் பாடல் என்று வகை பிரித்துள்ளனர் நமது முன்னோர்.

இப்பாடலில் கடைசி அடியை பாடலின் முதல் அடியாக மாற்றிப் பாடினால் பாடல்களின் பொருள் சரியாக விளங்கும்.

சிக்கலிலே வாழும் சிவன்
கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்

பாடலை மேலுள்ளவாறு படித்தால், சிக்கலில் இருக்கும் சிவபெருமான் கொன்றை மலர் மாலையைத் தன் மார்பில் அணிந்திருந்தார் என்றும் , கண்ணன் (கோபாலன்) புல்லாங்குழல் கொண்டு நின்று ஊதினார் என்றும், நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் அணிந்திருந்தார் என்றும், திருமால் (மாயன்) பாற்க்கடலில் ஆதிசேஷன்(அரவுஅணை ) மீது துயில் கொண்டிருந்தார் என்று பொருள் படும்படி பாடல் அமையும்.

இப்பொழுது பயணிகளுக்கு கடைமொழி மாற்று என்றால் என்னவென்று புரிந்திருக்குமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறெல்லாம் பாடல் பாடுவதில் நமது புலவருக்கு நிகர் நமது புலவர் தான்.

பாடல் பிடித்திருந்தால் கருத்துக்களை வெளியிடவும்.

Sunday, September 13, 2009

காளமேகப்புலவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்


காளமேகப்புலவர் தில்லையில் சிவகாமி அம்மையைக் கண்டு தருசிக்கும் போது பாடிய வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்தப் பாடலையே இன்று நாம் இந்தப் பதிவில் பயணிகளுக்கு விருந்தாக்குகின்றோம். இப்பாடலை இரட்டுற மொழிதல் (சிலைடை) அணிப் பாடல் என்றும் கூறலாம்.

வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது ஆகும். இந்த அணிப் புலமையில் நமது காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்கள் சிறந்து விளங்கியிள்ளனர்.

பாடல்:

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!


விளக்கம்:

இந்தப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியாகவும், இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது என்பதனைப் பயணிகளுக்கு முன்பே கூறியுள்ளோம். ஆகவே முதலில் திட்டுவது போல் உள்ள பாடலின் பொருளைப் பார்ப்போம்.

கோன் என்றால் ஆடு மற்றும் மாடுகள் வைத்து மேய்ச்சல் தொழில் செய்யும் இடைக் குல ஆண்களை அழைக்கும் சொல். அதாவது மதுரையில் வசிக்கும் ஒரு மாடு மேய்ப்பவனின் தங்கை வீட்டைவிட்டு வெளியேறி தில்லைநகரில் உள்ள ஆடு மேய்ப்பவனுக்கு மனைவியாகினாள்.

ஆடுகள் மேய்க்க ஆந்தையைப் (கோட்டான்) போல் ஒரு மகனையும் பெற்றாள். இங்கு இடைச்சி என்பது கோன் என்ற வார்த்தை போன்று அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களை அழைக்கும் வார்த்தையாகும். சிற்றிடைச்சி என்றால் சிறிய இடைகுலப்பெண் என்று பொருள். இவ்வாறு திட்டுவது போல் பாடலைப் புலவர் பாடியுள்ளார்.

ஆனால் இந்தப் பாடலுக்கான உட்கருத்தைப் பார்த்தோமெனில் பாடலின் பொருள் இன்னும் களிப்பாக இருக்கும்.

தமிழில் கோன் என்றால் அரசன் அல்லது ஆண்டவன் என்னும் பொருள்களும் உள்ளது. இங்கு மாட்டுகோன் என்று புலவர் குறிப்பிட்டிருப்பது ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணபிரான் அவர்களயே. அதே போல் தமிழில் ஆடு என்றால் நடனம் என்று மற்றொரு பொருள் உள்ளது. அதாவது ஆட்டுக்கோன் என்று புலவர் குறிப்பிட்டுள்ளது ஆடலரசன் தில்லையில் வாழும் நடராஜமூர்த்தி அவர்களையே.

அதாவது மதுரையில் உள்ள சுந்தரராஜ பெருமாளின் தங்கை மீனாட்சி அம்மை மதுரை நகரை விட்டு சிவகாமி அம்மையாராக தில்லைநகரில் அவதாரம் எடுத்து அந்நகரில் ஆடலுக்குப் பெயர்போன எம்பெருமான் தில்லைவாழ் நடராஜமூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதே முதல் இரண்டு அடிகளின் பொருள்.

அதென்ன குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள்?. இங்குதான் நம் புலவர் சொல் விளையாட்டைப் இலாவகமாக கையாண்டுள்ளார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்பது போக, பெருக்கல் குறி போன்று கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது (மரித்துக் குட்டுவது ) என்றும் இன்னும் ஒரு பொருள் உள்ளது.

கோட்டானை என்பது கோடு மற்றும் ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகும். இங்கு கோடு என்பது ஒரு தந்தம் அல்லது கொம்பு என்று பொருள் தருகிறது. ஆனை என்பது யானையைக் குறிக்கிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டனை.

அதாவது விநாயகரை வணங்கும் பொழுது அனைவரும் கைகளை பெருக்கல்குறி போல் வைத்து அவரவர் தலையில் குட்டி வணங்குவர். அதையே புலவர் அவ்வாறு வணங்குவதற்கு ஒரு மகனை இந்த உலகுக்குப் பெற்றுத் தந்தாள் என்று மூன்றாவது அடியில் கூறியுள்ளார்.

அதென்ன கட்டிமணி சிற்றிடைச்சி? மணியால் செய்யப்பட்ட மேகலை என்னும் ஒட்டியாணத்தைத் தன் சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவகாமி அம்மையார் என்று தன் கடைசி அடியில் புலவர் அம்பாளை வர்ணித்துள்ளார்.

இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சிலைடை அணிகள் அமைந்த இந்தப்பாடல் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பயணிகளுக்குப் பதிவாக வெளியிட்டுள்ளோம்.

படித்துப் பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

Saturday, September 5, 2009

காளமேகப்புலவரின் வசையும் வசை மீட்சிப் பாடலும்

அதென்ன வசை என்ற கேள்வி பயணிகளுக்குத் தோன்றுவது எங்களுக்குப் புரிகின்றது. வசை என்பது ஒருவரை நோக்கி கொடும் சொற்களால் திட்டுவது. வசை மீட்சி என்றால் அந்த வசையைப் புகழாக மாற்றுவது. அப்படி காளமேகப்புலவர் வசை பாடும் அளவுக்கு குற்றம் செய்தது யாரென்று பார்ப்போம்.

ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவனது சத்திரத்திற்கு புலவர் உணவு அருந்துவதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த புலவர் வசைப் பாடலைப் பாடினார்.

பாடல்:

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.


விளக்கம்:

இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று பயணிகளுக்கு ஆச்சர்யம் உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.

வசை:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும். ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர். அதை உண்பவர்க்கு பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.

பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடி புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.

வசை மீட்சி:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி(அத்தமிக்கும்) உள்ள பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலை வசைமீட்சிப் பாடலாகப் பாடியுள்ளார் நமது புலவர். இவ்வாறெல்லாம் பாடும் நுட்பம் காளமேகப்புலவருக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்தப் பாடலில் "ஓர்அகப்பை" என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகப்பை என்றால் கரண்டி என்று பொருள். ஏன் ஒரு அகப்பை என்று பயன்படுத்தவில்லை?. ஓர் மற்றும் ஒரு என்பது சுட்டிடைச்சொல் (article like an and a). ஓர் அல்லது ஒரு இந்த சொற்களைத் தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்தால் "ஓர்" பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் "ஒரு" பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு "அகப்பை", அ என்ற உயிர் எழுத்து முதலில் உள்ளதால் இங்கு "ஓர்" பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் கருத்துகளுக்கு ஆவலோடு காத்திருக்கின்றோம்.