'ஓவர்பீலா' உலகநாதன் பக்கம்:
நம்ம பஸ்ல தினம் வரும் பயணி 'ஓவர்பீலா' உலகநாதன் அவர்கள், சினிமா & TV நிகழ்ச்சி, இந்த மாதிரி விஷயத்துல மூழ்கி முத்தெடுத்தவர்...இந்தப்பதிவுல அவர்தான் உங்களிடம் பேசப்போகின்றார்...
நம்ம ஓவர்பீலா உலகநாதன் போன வாரம் 'A Wednesday' ஹிந்திப்படம் பாத்தாராம்...அத பத்தி இனி அவரே சொல்றாரு, படிங்க....

இந்த படத்த பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல!!!!
சாது மிரண்டால் நாடு கொள்ளாது, இந்த பழமொழிதான் இந்த படத்தின் சாராம்சம்...சாதாரண மனிதன் எப்படி தனியொருவனாக நான்கு தீவிரவாதிகளை அழிக்கின்றான் என்பது தான் கதை...நகரின் போலீஸ் உயர் அதிகாரி தான் ஒய்வு பெறுவதற்கு முன்பு, தான் சந்தித்ததிலேயே முக்கியமான வழக்கு என்ன என்பது பற்றி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகின்றது...அந்த வழக்கு இதுவரை எங்கும் பதிவாகவில்லை மற்றும் அது ஒரு சாதாரண மனிதனைப் பற்றியது...ஒரு மனிதன் அந்த போலீஸ் உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டு தான் நகரின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வேண்டுமானால், தன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றும் கூறுகின்றான்...அவன் கேட்பது பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு முக்கியத் தீவிரவாதிகளை...போலீஸின் உதவி கொண்டே அந்த தீவிரவாதிகளை எப்படி அழிக்கின்றான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்...வழக்கம் போல நாயகன் அவர்களைக் கொள்வதற்கு காரணங்கள் கூறுகின்றான்...
படத்தின் பிளஸ்:
நசுரிதீன் ஷா மற்றும் அனுபம் கேர் இருவரின் நடிப்பு
கதையின் நாயகன் தான் ஏன் தீவிரவாதிகளை ஒழிக்க எண்ணினேன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள்...(இந்த இடத்தில வசனங்கள் அருமை!!!)
படம் நீளம் குறைவு...அதனால் விறுவிறுப்புக் குறையவில்லை
படத்தின் மைனஸ்:
லாஜிக் சுத்தமாக இல்லை
சாதாரண மனிதன் தனிஒருவனாக வெடிமருந்து வாங்கி வந்து வெடிகுண்டு தயார் செய்வது...( இதற்கு நாயகன் இண்டர்நெட்டில் தேடி இதை எல்லாம் கண்டுபிடித்ததாக சொல்கிறார்...சரி என்று ஒத்துக்கொண்டாலும் அவர் எப்படி சுலபமாக RDX வாங்க முடியும் என்பது போன்ற சில கேள்விகள் நம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை )
இந்தப்படத்தின் சாராம்சத்தை ஒத்து நம் தமிழில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன (இயக்குனர் ஷங்கரின் பெரும்பான்மையான படங்கள்) இருந்தாலும் இந்தப்படம் எந்த விதத்திலும் அவற்றிலிருந்து வேறுபடவில்லை...ஏன் நம் ஊரில் மட்டும் மொழி வேறுபட்டாலும் சிந்தனை வேறுபடவில்லை என்று இந்த படங்களின் மூலம் அடிக்கடி நிரூபித்துக் காட்டுகின்றார்கள் என்று புரியவில்லை...

இதை தமிழில் வேறு எடுக்கின்றார்கள். இங்கு கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடிக்கின்றார்கள். (இருவரின் நடிப்புக்கும் சரியான தீனி!!).கண்டிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் படம் நன்றாக வரும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஒரு வேற்றுமொழி படத்தால் உந்தப்பட்டு அதை இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி எடுப்பது என்பது வேறு.அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்வது என்பது வேறு. நம் ஆட்கள் இரண்டாவதை தான் எப்போதும் செய்வார்கள்