Wednesday, December 9, 2009

இந்திய அணி - சில நாள் முதல்வன்


இந்தியக் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னெப்போதும் இல்லாத நிலையை அடைந்திருக்கின்றது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 -0 என்று வென்றதால் ICC டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அது போல் நூறு டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது. இப்போதுள்ள இந்திய அணி வீரர்களைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிது போல் தோன்றலாம்.இந்த வெற்றி அதிகம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இது எளிதில் பெற்றதல்ல.இந்த அணி உருவாக, பத்தாண்டு காலம் பிடித்துள்ளது. கங்குலி தலைமையில் தூவப்பட்ட விதை இன்று தோனியின் பார்வையில் முளைத்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணி நியூ சிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் போன்ற நாடுகளில் விளையாடி டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
வேற எந்த காலக்கட்டத்திலும் இந்திய அணி இப்படி வெற்றி பெறவில்லை.

90 களின் இறுதி வரை இந்திய அணி உள்ளூரில் மட்டுமே பலவான் என்ற நிலை இருந்தது.
அத்திபூத்தாற்போல் வெளிநாடுகளில் ஓரிரு வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. இந்திய அணி பெற்ற 100 டெஸ்ட் வெற்றிகளில் 41 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது. அதுபோல் வெளிநாடுகளில் இந்திய அணி அடைந்துள்ள 25 டெஸ்ட் வெற்றிகளில் (ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளிடம் பெற்ற வெற்றி நீங்கலாக) 13 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது.

1999 ல் சூதாட்ட புகாரில் சிக்கி அணி கேப்டன் அசாருதீன் வெளியேற்றப்பட்ட நேரத்தில் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சுருண்டது. அந்த நேரத்தில் சச்சினும் தலைமைப்பொறுப்பிலிருந்து விலக, கேப்டன் பதவி கங்குலியைத் தேடி வந்தது. கங்குலி செய்த முதல் காரியம் அணியின் மூத்த வீரர்கள் சிலரை வெளியேற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். இதன் பலனாக மினி உலகக்கோப்பை இறுதி வரை இந்திய அணி சென்றது. பின்னர் இந்தியாவிற்கு பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. (உபயம்: லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன்). இதுதான் இந்திய அணியின் வெற்றிப்பயணத்தின் முதல் படி எனலாம். ஏனெனில் ஆஸ்திரேலியா அணி அபோது தான் தொடர்ந்து பல டெஸ்ட் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த நேரம். யாராலும் வெல்ல முடியாத அணி என்ற அதன் நிலை சற்றே ஆட்டம் கண்டது.

பின்னர் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 1 - 1 என்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இந்தத் தொடரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தான் சேவாக் முதன்முதலில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அணிக்கு சிறந்த அதிரடியான துவக்க வீரர் கிடைத்தார். அதன்பின் ஸ்டீவ் வாவின் கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா சென்ற கங்குலி தலைமையிலான அணி 1 - 1 என்று சமன் செய்தது. பின்னர் பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு ஏதிரான டெஸ்ட் வெற்றி என்று இந்தியா, நன்கு முன்னேறியது.

அணியின் புதிய பயிற்சியாளர் சேப்பலுடன் மோதி கங்குலி வெளியேறிய பின்னர் டிராவிட் கேப்டன் பொறுப்பேற்றார்.பின்னர் வெஸ்ட்இண்டீஸ் சென்ற இந்திய அணி அங்கு நடந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றி , இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடர் வெற்றி என்று நன்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. உலகக்கோப்பையில் மோசமான தோல்விக்குப் பின் டிராவிட் வெளியேற கும்ப்ளே கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையில் பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை வென்றது. பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நடுவர்களின் மோசமான தீர்ப்புகளால் தொடரை 2 - 1 என்று இழந்தது. இந்த கால கட்டத்தில் தான் சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக அறியப்பட்டனர். இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

பின்னர் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவுடன் 1 - 1 என்று சமன் செய்தது. இங்கு வந்த ஆஸ்திரேலியா அணியை 2 - 0 என்று தோற்கடித்தது, பின்பு நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றது. இதுவரை தலைமையேற்று விளையாடிய டெஸ்ட் போட்டி ஒன்றிலும் தோற்காமல் வெற்றிக்கேப்டனாக வலம் வருகிறர் தோனி.

இந்த முதலிடம் நிரந்தரம் என்று நாம் அணியினரும் சரி, நாமும் சரி, நினைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா நம்மை முந்தும் நிலையிலுள்ளது.மேலும் அடுத்த ஒரு வருடம் இந்தியா, வங்காளதேசத்தை மட்டுமே எதிர்த்து டெஸ்ட் விளையாடவுள்ள நிலையில், தரவரிசையில் நம் அணியின் சரிவும் தவிர்க்க முடியாதது எனத்தெரிகின்றது. இந்த நிலையில் இந்திய அணியை மேம்படுத்த தோனி என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்தப்பத்தாண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் பலம், பேட்டிங் மட்டுமே. பௌலிங்கில் கும்ப்ளே, ஹர்பஜன் நீங்களாக ஒருவரும் ஜொலிக்கவில்லை. ஆக இந்தியாவின் பலம், சுழற்ப்பந்து மட்டுமே. ஏனெனில் இந்திய சுழற்ப்பந்து வீரர்கள் வெளிநாடுகளின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களிலும் நமக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றனர். சற்று கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டினால், இந்திய அணி வெற்றி பெற்ற இந்த காலக்கட்டத்தில், வேகப்பந்து வீச்சில் ஒவ்வொரு அணியிலும் சிறந்த இரு வீரர்கள் இருப்பர்.

உதாரணம்:
தென் ஆப்பிரிக்கா - டோனல்ட் - பொல்லாக்
வெஸ்ட் இண்டீஸ் - வால்ஷ் - அம்ப்ரோஸ்
பாகிஸ்தான் - வாசிம் அகரம் - வாகார் யூனிஸ்
ஆஸ்திரேலியா - மெக்ராத் - ப்ரெட் லீ

ஆனால் இந்திய அணியில் ஸ்ரீநாத் சென்ற பின்னர் அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. நாமும் நிறைய பரிசோதனைகள் செய்து பார்த்தும் சிறந்த இரு வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை. வரும் ஓரிரு வீரர்களும் சில காலம் மட்டுமே சோபிக்கின்றனர். பின் காயம் மற்றும் உடல் தகுதியின்மை காரணமாக சில காலம் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சுழற்ப்பந்து வீரர்கள் மற்றும் பேட்டிங் இரண்டை மட்டுமே நம்பி இவ்வளவு வெற்றிகள் பெறுவது சுலபமில்லை.வேகப்பந்து வீச்சாளர் பாற்றக்குறையைப் போக்குவது இவரின் முதல் கடமையாகும்.

இனி இந்திய அணி ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடி, வென்று நீருபிக்கும் போது மட்டுமே அது முதலிடம் பிடிக்கவல்ல அணியென்று நினைக்கமுடியும்.

மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெறப்போகும் நிலையில் அந்த இடங்களை சரியாக நிரப்பும் இளம்வீரர்களைத் தேர்வு செய்து இப்பொது முதல் பயிற்சி அளிப்பது காட்டாயமாகின்றது. இவை அனைத்தும் நிறைவேற்றும் பட்சத்தில் தான் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான இடம் பெரும். ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Wednesday, November 25, 2009

காளமேகப்புலவரின் மறுமொழி..........


இரண்டு மாதங்களாக பதிவுகள் ஏதும் வெளியிடாமல் இருந்ததற்கு பயணிகளிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்.

காளமேகப்புலவர் குடந்தையில் ஒரு வைணவ குலத்தில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் வரதன். திருவானைக்கா கோவில் மோகனாங்கியின் மீது கொண்ட காதலால் சைவ குலத்திற்கு மாறி அவளையே மணந்து திருவானைக்கா கோவிலில் இருவரும் திருப்பணி செய்து வந்தனர்.

இவ்வாறு வைணவ குலத்திலிருந்து சைவ குலத்துக்கு மாறிய நம் புலவரிடம் திருவரங்கத்தில் வசிக்கும் வைணவர் ஒருவர், திருமால் உலகத்தை உண்டபொழுது உங்கள் சிவபெருமான் அந்த உலகத்தில் எங்கே இருந்தார் என்று நக்கலாக ஒரு வினாவை வினவினார். அந்த வினாவிற்கு காளமேகப் புலவர் ஒரு பாடலின் மூலம் பதில் உரைத்தார். அந்தப் பாடலையே நாம் இன்று பயணிகளுக்காக பதிவாக வெளியிடுகின்றோம்.

பாடல்:

அருந்தினான் அண்டம்எலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி ஏதுஎன்று இயம்பப் - பொருந்திப்
பருங்கவளம் யானைகொளப் பாகன்அதன் மீதே
இருந்தபடி ஈசன்இருந் தான்.


விளக்கம்:

உலகத்தை (அண்டம்) திருமால் உண்ட பொழுது சிவன் அந்த உலகத்தில் இருந்த இடத்தைப் கூறு என்று கேட்டால், யானை சோற்று உருண்டையை உண்ணும் பொழுது யானையின் பாகன் அதன் மீது ஏறி அமர்ந்திருந்தது போல் சிவன் திருமாலின் மீது அமர்ந்திருந்தார். என நக்கலாக வினா எழுப்பிய திருவரங்கத்து வைணவனுக்கு நக்கலாகவே பாடல் மூலம் பதில் அளித்தார்.

இவ்வாறெல்லாம் யோசிக்கும் சக்தியை காளமேகப்புலவருக்கு மட்டும் கடவுள் கொடுத்தாரோ என்னவோ! அதே போல் நினைத்த இடத்தில் கூறவேண்டிய அனைத்தையும் எதுகை மோனையுடன் வெண்பாவில் அமைப்பது நம் காளமேகப் புலவருக்கு கைவந்த கலையாகவே இருந்திருக்கின்றது.

இதே போல் இன்னுமொரு பாடலுடன் உங்களை சந்திக்கின்றோம். பாடல் பிடித்திருந்தால் பயணிகள் பின்னூட்டம் இட மறக்கவேண்டாம்.

Saturday, September 26, 2009

காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்........

பயணிகளுக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்!

சென்ற வாரம் எங்களுடைய வலை இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் எங்களால் பயணிகளுக்கு எந்தப் பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்க்காகப் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்து இந்தவாரப் பதிவை உங்களுக்காக வெளியிடுகின்றோம்.

இந்தப் பதிவில் பயணிகளுக்காக காளமேகப் புலவரின் கடைமொழி மாற்றுப் பாடல்களில் ஒன்றைத்தான் வெளியிட இருக்கின்றோம். அதென்ன கடைமொழி மாற்றுப் பாடல்!. ஐயம் புரிகின்றது. ஆனால் அதைக் கூறிவிட்டால் பாடலின் சுவை குறைத்துவிடும். ஆகவே அதைப்பற்றி பாடலின் முடிவில் பார்ப்போம்.

பாடல்:

கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்.


விளக்கம்:

கொன்றை என்பது ஒரு வகை மலர். இது சிவபெருமானின் திருவடையாள மலர். இது சிவபெருமானுக்கே உரிய மலராகும். இம்மலருக்கு "சொர்ண புஷ்பம்" என்ற ஒரு பெயரும் உண்டு. அவ்வாறு பெருமையடைய மலரை கோபாலன் (திருமால்) அணிதிருந்தார்(தரித்தான்) என்று புலவர் கூறியுள்ளார்.

கோல் என்றால் மரக்கிளையில் உள்ள குச்சி. அதாவது மூங்கில் மரக்கிளையில் உள்ளகுச்சியை எடுத்து சிவபெருமான் (நீள்சடையன்) புல்லாங்குழல் ஊதினார் என்றும் புலவர் கூறுகின்றார். அதெப்படி கண்ணன் தானே குழல் ஊதுவார் என்ற கேள்வி நம் பயணிகளுக்கு வருவது எங்களுக்குப் புரிகின்றது.

அக்கு என்றால் ருத்திராட்சம். அதாவது பொன் போன்ற ருத்திராட்சத்தை திருமால் (மாயன்) அணிந்திருந்தார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் சிவன்தானே ருத்திராட்சம் அணிவார் என்று பயணிகளுக்கு சந்தேகம் வருவது புரிகின்றது.

சிக்கல் என்பது நாகைப் பட்டினத்திற்கு அருகில் உள்ள ஒரு சிவதலம். இங்கு சிங்காரவேலரும் மிகப் பிரபலம். வசிட்டர் சிவபெருமானை தரிசித்த தலம். அவ்வாறு பெருமையுடைய சிக்கலிலே வாழும் சிவன் பாம்பினாலான மெத்தையிலே (அரவுஅணை) கண் மூடி உறங்கினார் என்றும் புலவர் கூறுகின்றார். இங்கும் திருமால் தானே பாற்கடலிலே ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார் என்று பயணிகள் மனதில் நினைப்பது புரிகின்றது. ஆனால் புலவர் அவ்வாறுதானே பாடியிருக்கின்றார்.

இங்குதான் நமது புலவர் கடைமொழி மாற்றை இலாவகமாகக் கையாண்டுள்ளார். இப்பொழுது கடைமொழி மாற்று என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு பாடலின் முடிவில் உள்ள கடைசி சீரையோ அல்லது கடைசி அடியையோ முதலாவதாக மாற்றிப் படித்து பொருள் காணவேண்டிய பாடல்களை கடை மொழி மாற்றுப் பாடல் என்று வகை பிரித்துள்ளனர் நமது முன்னோர்.

இப்பாடலில் கடைசி அடியை பாடலின் முதல் அடியாக மாற்றிப் பாடினால் பாடல்களின் பொருள் சரியாக விளங்கும்.

சிக்கலிலே வாழும் சிவன்
கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்றுகுழல் ஊதினான் நீள்சடையன் - பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவுஅணையில் கண்வளர்ந்தான்

பாடலை மேலுள்ளவாறு படித்தால், சிக்கலில் இருக்கும் சிவபெருமான் கொன்றை மலர் மாலையைத் தன் மார்பில் அணிந்திருந்தார் என்றும் , கண்ணன் (கோபாலன்) புல்லாங்குழல் கொண்டு நின்று ஊதினார் என்றும், நீண்ட சடை உடைய சிவபெருமான் ருத்திராட்சம் அணிந்திருந்தார் என்றும், திருமால் (மாயன்) பாற்க்கடலில் ஆதிசேஷன்(அரவுஅணை ) மீது துயில் கொண்டிருந்தார் என்று பொருள் படும்படி பாடல் அமையும்.

இப்பொழுது பயணிகளுக்கு கடைமொழி மாற்று என்றால் என்னவென்று புரிந்திருக்குமென்று நாங்கள் முழுமையாக நம்புகின்றோம். இவ்வாறெல்லாம் பாடல் பாடுவதில் நமது புலவருக்கு நிகர் நமது புலவர் தான்.

பாடல் பிடித்திருந்தால் கருத்துக்களை வெளியிடவும்.

Sunday, September 13, 2009

காளமேகப்புலவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்


காளமேகப்புலவர் தில்லையில் சிவகாமி அம்மையைக் கண்டு தருசிக்கும் போது பாடிய வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்தப் பாடலையே இன்று நாம் இந்தப் பதிவில் பயணிகளுக்கு விருந்தாக்குகின்றோம். இப்பாடலை இரட்டுற மொழிதல் (சிலைடை) அணிப் பாடல் என்றும் கூறலாம்.

வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது ஆகும். இந்த அணிப் புலமையில் நமது காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்கள் சிறந்து விளங்கியிள்ளனர்.

பாடல்:

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!


விளக்கம்:

இந்தப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியாகவும், இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது என்பதனைப் பயணிகளுக்கு முன்பே கூறியுள்ளோம். ஆகவே முதலில் திட்டுவது போல் உள்ள பாடலின் பொருளைப் பார்ப்போம்.

கோன் என்றால் ஆடு மற்றும் மாடுகள் வைத்து மேய்ச்சல் தொழில் செய்யும் இடைக் குல ஆண்களை அழைக்கும் சொல். அதாவது மதுரையில் வசிக்கும் ஒரு மாடு மேய்ப்பவனின் தங்கை வீட்டைவிட்டு வெளியேறி தில்லைநகரில் உள்ள ஆடு மேய்ப்பவனுக்கு மனைவியாகினாள்.

ஆடுகள் மேய்க்க ஆந்தையைப் (கோட்டான்) போல் ஒரு மகனையும் பெற்றாள். இங்கு இடைச்சி என்பது கோன் என்ற வார்த்தை போன்று அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களை அழைக்கும் வார்த்தையாகும். சிற்றிடைச்சி என்றால் சிறிய இடைகுலப்பெண் என்று பொருள். இவ்வாறு திட்டுவது போல் பாடலைப் புலவர் பாடியுள்ளார்.

ஆனால் இந்தப் பாடலுக்கான உட்கருத்தைப் பார்த்தோமெனில் பாடலின் பொருள் இன்னும் களிப்பாக இருக்கும்.

தமிழில் கோன் என்றால் அரசன் அல்லது ஆண்டவன் என்னும் பொருள்களும் உள்ளது. இங்கு மாட்டுகோன் என்று புலவர் குறிப்பிட்டிருப்பது ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணபிரான் அவர்களயே. அதே போல் தமிழில் ஆடு என்றால் நடனம் என்று மற்றொரு பொருள் உள்ளது. அதாவது ஆட்டுக்கோன் என்று புலவர் குறிப்பிட்டுள்ளது ஆடலரசன் தில்லையில் வாழும் நடராஜமூர்த்தி அவர்களையே.

அதாவது மதுரையில் உள்ள சுந்தரராஜ பெருமாளின் தங்கை மீனாட்சி அம்மை மதுரை நகரை விட்டு சிவகாமி அம்மையாராக தில்லைநகரில் அவதாரம் எடுத்து அந்நகரில் ஆடலுக்குப் பெயர்போன எம்பெருமான் தில்லைவாழ் நடராஜமூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதே முதல் இரண்டு அடிகளின் பொருள்.

அதென்ன குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள்?. இங்குதான் நம் புலவர் சொல் விளையாட்டைப் இலாவகமாக கையாண்டுள்ளார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்பது போக, பெருக்கல் குறி போன்று கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது (மரித்துக் குட்டுவது ) என்றும் இன்னும் ஒரு பொருள் உள்ளது.

கோட்டானை என்பது கோடு மற்றும் ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகும். இங்கு கோடு என்பது ஒரு தந்தம் அல்லது கொம்பு என்று பொருள் தருகிறது. ஆனை என்பது யானையைக் குறிக்கிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டனை.

அதாவது விநாயகரை வணங்கும் பொழுது அனைவரும் கைகளை பெருக்கல்குறி போல் வைத்து அவரவர் தலையில் குட்டி வணங்குவர். அதையே புலவர் அவ்வாறு வணங்குவதற்கு ஒரு மகனை இந்த உலகுக்குப் பெற்றுத் தந்தாள் என்று மூன்றாவது அடியில் கூறியுள்ளார்.

அதென்ன கட்டிமணி சிற்றிடைச்சி? மணியால் செய்யப்பட்ட மேகலை என்னும் ஒட்டியாணத்தைத் தன் சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவகாமி அம்மையார் என்று தன் கடைசி அடியில் புலவர் அம்பாளை வர்ணித்துள்ளார்.

இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சிலைடை அணிகள் அமைந்த இந்தப்பாடல் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பயணிகளுக்குப் பதிவாக வெளியிட்டுள்ளோம்.

படித்துப் பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

Saturday, September 5, 2009

காளமேகப்புலவரின் வசையும் வசை மீட்சிப் பாடலும்

அதென்ன வசை என்ற கேள்வி பயணிகளுக்குத் தோன்றுவது எங்களுக்குப் புரிகின்றது. வசை என்பது ஒருவரை நோக்கி கொடும் சொற்களால் திட்டுவது. வசை மீட்சி என்றால் அந்த வசையைப் புகழாக மாற்றுவது. அப்படி காளமேகப்புலவர் வசை பாடும் அளவுக்கு குற்றம் செய்தது யாரென்று பார்ப்போம்.

ஒரு முறை நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தான் வருணகுலாதித்தன் என்பவனது சத்திரத்திற்கு புலவர் உணவு அருந்துவதற்குச் சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரமாகியும் உணவு பரிமாறப்படவில்லை. ஆகவே கோபமடைந்த புலவர் வசைப் பாடலைப் பாடினார்.

பாடல்:

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும்; குத்தி
உலையில்இட ஊர்அடங்கும் ; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்.


விளக்கம்:

இந்த ஒரு பாடலுக்குள்ளே வசையும் உள்ளது வசை மீட்சியும் உள்ளது. எப்படியென்று பயணிகளுக்கு ஆச்சர்யம் உண்டாவது எங்களுக்குப் புரிகின்றது. முதலில் வசைக்கானப் பொருளைப் பாப்போம்.

வசை:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் சூரியன் மறையும் (மாலை நேரத்தில்) பொழுது அரிசி வரும். ஊரில் உள்ள அனைவரும் தூங்கிய பின்னரே அதை உலையிலிட்டு உணவாக்குவர். அதை உண்பவர்க்கு பரிமாறும் பொழுது நடுஇரவு ஆகிவிடும் என்று வசையாகப் பாடியுள்ளார்.

பாடலைக் கேட்டவுடனே வந்திருப்பது காளமேகப்புலவர் என்று அறிந்துகொண்ட காத்தான், தன் சத்திரத்தின் பெயர் கேட்டுவிடக்கூடாது என்று எண்ணி வசைமீட்சிப் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டான். மறுபடியும் இதே பாடலைப் பாடி புலவர் வேறு விளக்கம் கொடுத்தார்.

வசை மீட்சி:

நீண்ட அலையோசை உடைய கடலால் சூழப்பட்ட நாகைப் பட்டினத்தில் உள்ள காத்தானின் சத்திரத்தில் நாட்டில் பஞ்சம் பட்டினி(அத்தமிக்கும்) உள்ள பொழுது அரிசி மூட்டைகள் கணக்கிலடங்காது வந்து இறங்கும். அதை சமைத்து (உலையில் இட்டு) ஊர்மக்களுக்குக் கொடுக்க அனைவரின் பசியும் அடங்கும். அவ்வாறு சமைக்கப்பட்ட அன்னத்தை(சோறு) இலையில் போடும் பொழுது அது நட்சத்திரத்தைப் போல் பிரகாசிக்கும் என்று வசையாகப் பாடியப் பாடலை வசைமீட்சிப் பாடலாகப் பாடியுள்ளார் நமது புலவர். இவ்வாறெல்லாம் பாடும் நுட்பம் காளமேகப்புலவருக்கே உரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இந்தப் பாடலில் "ஓர்அகப்பை" என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகப்பை என்றால் கரண்டி என்று பொருள். ஏன் ஒரு அகப்பை என்று பயன்படுத்தவில்லை?. ஓர் மற்றும் ஒரு என்பது சுட்டிடைச்சொல் (article like an and a). ஓர் அல்லது ஒரு இந்த சொற்களைத் தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக அமைந்தால் "ஓர்" பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் "ஒரு" பயன்படுத்தப்பட வேண்டும். இங்கு "அகப்பை", அ என்ற உயிர் எழுத்து முதலில் உள்ளதால் இங்கு "ஓர்" பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் கருத்துகளுக்கு ஆவலோடு காத்திருக்கின்றோம்.

Saturday, August 29, 2009

காளமேகப்புலவரின் ககர வரிசைப் பாடல்

தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிய இடைவேளை ஏற்பட்டதற்கு முதலில் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சக வலைப்பூ நண்பர் கில்ஸ் அவர்கள் விரும்பிக்கேட்ட ககர வரிசையில் காளமேகப்புலவர் பாடிய பாடலையே நாங்கள் இன்று பயணிகளுக்குப் பதிவாக வெளியிட இருக்கின்றோம். (ககர வரிசை என்றால் தமிழில் உள்ள க, கா.... வரிசை என்று பயணிகள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறோம்)

பாடல்:

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைகா கா!


விளக்கம்:

இப்பாடலைப் பாடலில் உள்ள சீர்ப்படி படித்தால் கடினமாக இருக்கும். ஆகவே இங்கு நாங்கள் பயணிகளுக்காகப் பாடலை சீர் பிரித்து கொடுத்துள்ளோம்.

காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா !


பாடலை இவ்வாறு சீர் பிரித்துப் பாடலாம். காக்கைக்கு ஆகா கூகை என்பது, இரவில் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) கண் நன்றாகத் தெரியும். ஆனால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. ஆகவே இரவில் ஆந்தையும் காகமும் சண்டையிட்டால் ஆந்தையே வெல்லும்.

கூகைக்கு ஆகா காக்கை என்பது காகத்திற்கு பகலில் கண் தெரியும். ஆனால் கூகைக்கு (கோட்டான் அல்லது ஆந்தை) பகலில் கண் தெரியாது. அகவே பகலில் காக்கையும் ஆந்தையும் சண்டையிட்டால் காகமே வெல்லும். .

கோக்கு கூ காக்கைக்கு என்பது, கோ என்றால் மன்னன். அதேபோல் கூ என்றால் உலகம். இங்கு காக்கை என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கொக்கு ஒக்க என்பது, கொக்கு என்றால் பறவையினத்தில் ஒன்றான கொக்கைக் குறிக்கும். அதாவது கொக்கு ஒக்க என்றால் "கொக்கைப் போல்" என்று பொருள். அதாவது "ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்கு கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும்" என்பது இந்த அடியின் பொருள்.

கைக்கைக்கு என்றால் "பகையை எதிர்த்து" என்று பொருள். காக்கைக்கு என்பது காத்தல் (பாதுகாத்தல்) என்று பொருள். கைக்கு ஐக்கு ஆகா என்றால் திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்று பொருள்.

அதாவது ஒரு மன்னனுக்கு அவன் நாட்டைக் காப்பதற்குக் கொக்கு தனக்குத் தேவையான உணவு வரும்வரைக் காத்திருப்பது போல் காத்திருக்கவேண்டும். இல்லையெனில் பகையை எதிர்த்து நாட்டைக் காத்தல் என்பது திறமைமிக்க மன்னனுக்குக் கூட கைக்கு எட்டாமல் போய்விடும் என்பதே இரண்டு மற்றும் மூன்றாவது அடியின் பொருள்.

இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட பல்சுவைப் பாடல்களைப் படுவதில் வல்லவரான காளமேகப்புலவர் இன்னும் சிறந்த பாடல்களெல்லாம் பாடியுள்ளார். அவைகளையும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.

பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறவாதீர்.

Wednesday, August 12, 2009

கலைஞானியின் பொன்விழா

12-08-1959 இல் 'அம்மாவும் நீயே அப்பாவும் 'நீயே என்று சின்னஞ்சிறு பாலகனாக 'களத்தூர் கண்ணம்மா' வில் தொடங்கியப் பயணம் பத்து அவதாரங்கள் எடுத்த பின்பும் இன்னும் இடையறாது ஓடிக் கொண்டிருக்கின்றது.இன்றோடு பத்மஸ்ரீ கமல்ஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து ஐம்பதாண்டுகள். வேறு எந்த நடிகருக்கும் எளிதில் கிடைத்துவிட முடியாத சிறப்பு இது.
முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசியவிருது. பின்பு இன்னும் மூன்று தேசியவிருதுகள். ஐந்து மொழிகளில் நடித்த சிறப்பு, மேலும் பல்வேறு சாதனைகள். நடன இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என நிறைய முகங்கள். கடந்த முப்பதாண்டு கால தமிழ் சினிமா வளர்ச்சியின் எந்த காலகட்டத்திலும் தவிர்க்க முடியாத ஒரு பெயர் கமல்ஹாசன். எவ்வளவு புகழப்படுகின்றாரோ அவ்வளவு விமர்சனங்களையும் சந்திக்கத் தவறியதில்லை.


இவரின் தனிப்பட்ட வாழ்க்கை சரியில்லை, மேலும் இவர் படத்தில் முத்தக்காட்சி அதிகம் இருக்கும், இவரின் பல படங்கள் வேற்று மொழிப்படங்களின் தாக்கத்தினால் எடுக்கப்பட்டவை என நிறைய குற்றச்சாட்டுகள். மன்னிக்கவும் இவரைப்பற்றி விமர்சிக்கவல்ல இந்தப்பதிவு. மேலும் இது கமலிற்கு துதிபாடும் நோக்கிலும் எழுதப்பட்டதல்ல.

ஐம்பது ஆண்டுகள் கடந்தும் சளைக்காமல் தமிழ் சினிமாவின் புகழைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாயகனுக்கு செலுத்துப்படும் ஒரு சிறு மரியாதை.

Saturday, August 8, 2009

காளமேகப்புலவரின் யானைப் பொரியல் மற்றும் குதிரைப் பச்சடி......

ஒருவர் காளமேகப்புலவரிடம் கரி என்று தொடங்கி உமி என்று முடியுமாறு ஒரு பாடல் பாடுமாறு கேட்டிருக்கிறார். அதற்க்குப் புலவர், ஒருவன் அவனுடைய அத்தை மகளின் சமையலின் சிறப்பைப் பாடலில் கூறுவது போல் ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடிய அப்பாடலையே இங்கு இன்று பயணிகளுக்காகப் பதிவாக வெளியிடுகின்றோம்.


பாடல்:
கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக் காண் சீச்சி உமி.

விளக்கம்:
கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று பயணிகள் யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடிக்கும் என்று நம்புகின்றோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

குறிப்பு:
கில்ஸ் அவர்கள் விரும்பிக் கேட்ட காக்கைக்கா காகூகை............ பாடல் அடுத்தப் பதிவில் கட்டாயம் இடம்பெறும் என்பதையும் இங்கு கூறிக்கொள்கின்றோம்.

Thursday, August 6, 2009

சுவர்க்கத்தின் குழந்தைகள்
உலக சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படம்.குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு வித்யாசமானது. அன்பு ஒன்று மட்டுமே அதில் நிறைந்திருக்கும். வெளியே நிலவும் வன்மம், வெறுப்பு, கோபம், வன்முறை முதலியனவற்றுக்கு அங்கு இடமில்லை. நாம் சந்திக்கும் சங்கடங்கள் அவர்களுக்குத் தெரியாது.அதுபோல குழந்தைகளின் சந்தோஷங்கள் நமக்குப் புரிவதில்லை. ஒரு ஊதிய உயர்வு, ஒரு வெளிநாட்டுப் பயணம், நண்பர்களுடன் ஒரு சினிமா, பிடித்த பெண்ணுடன் ஊர் சுற்றுதல், இவை தரும் சந்தோஷங்கள் நம்மால் உணர முடியும். ஆனால் இந்த சந்தோஷங்கள் அனைத்தும் ஒரு சிறு மிட்டாய் அவர்களுக்குத் தந்துவிடும்.எவ்வளவுதான் அவர்களுக்குள் சண்டைகள் இருந்தாலும் அவை வன்முறையில் முடிவதில்லை. அவர்களை சமாதானப்படுத்த ஒரு சிறு விளையாட்டுப் பொருள் போதும்.மொத்தத்தில் அவர்கள் நம்முடனேயே வாழ்ந்து வந்தாலும் அவர்களின் உலகை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் சண்டையை, பாசத்தை நாமும் ஒரு குழந்தையாக நின்று பார்த்து, புரிந்துகொள்ள உதவி செய்யும் முயற்சி தான் இந்தப்படம்.

அலி,சாரா இருவரும் அண்ணன் தங்கை (இருவரும் சிறியவர்கள் தான்). இவர்களுக்கு ஒரு தம்பி (சின்னஞ்சிறிய குழந்தை), அப்பாவிற்கோ பெரிய உத்தியோகமில்லை. குடும்பம் சற்று வறுமையான குடும்பம்தான். சாராவின் கிழிந்த ஷூவை தைத்து வங்கி வரும் அலி, ஒரு காய்கறிக் கடையில் நுழையும்போது அந்த ஷூ உள்ள பையை ஓரமாக வைத்துவிட்டு கடையில் உள்ளே செல்கின்றான். அப்போது அங்கு வரும் குப்பை அள்ளும் ஒருவன், அந்த ஷூ பையையும் எடுத்துச்சென்று விடுகின்றான். ஷூ தொலைந்த விஷயத்தை சாராவிடம் சொல்லி, தான் அதை எப்படியாவது கண்டுபிடித்துத் தருவதாகவும், அதனால் இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றான். மேலும் அதுவரை சாரா பள்ளிக்குத் தன்னுடைய ஷூவையே போட்டுச்செல்லுமாறு சொல்கின்றான். அந்த ஊரில் ஆண்களுக்கு மதியம் பள்ளி மற்றும் பெண்களுக்குக் காலையில் பள்ளி. அதனால் தினமும் சாரா தன் அண்ணனின் ஷூ வை போட்டுகொண்டு சென்று, பின் பள்ளி முடிந்தபின் வேகவேகமாக ஓடிவந்து அண்ணனிடம் தருகின்றாள். இருவரின் பள்ளிகளுக்கும் தூரம் அதிகம். எனவே சாரா ஓடிவந்து தருவதற்கு நேரமாகிவிடும். இதனால் அலி பள்ளிக்குத் தினமும் தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். இதற்கிடையில் சாரா தன்னுடைய ஷூ வை தான் படிக்கும் பள்ளியிலேயே ஒரு சிறுமி போட்டிருப்பதைக் காண்கின்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளின் வீட்டை அடையாளம் கண்டுகொள்கின்றாள். அவளிடமிருந்து எப்படியாவது தன்னுடைய ஷூ வை வாங்கிவிடவேண்டுமென்று சாரா, அலியை அழைத்துக்கொண்டு செல்கின்றாள் . ஆனால் அந்த சிறிமியும் தங்களைப் போல் ஏழையெனத் தெரிந்து பின் வந்து விடுகின்றனர். பிற்பாடு சாரா ஒரு நாள் மறந்துவிட்டு போனப் பேனாவை அந்த சிறுமி சாராவிடம் தருகின்றாள். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர்.
இதனிடையே அலி படிக்கும் பள்ளியில் ஒரு அறிவிப்பைக் காண்கின்றான். அது அந்த ஊரில் நடக்கப்போகும் பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் பற்றிய அறிவிப்பு. அந்த போட்டியில் மூன்றாவது பரிசு ஷூ என்று அறிவிக்கபட்டுள்ளதைப் பார்த்து, தன் தங்கைக்கு எப்படியாவது அந்த ஷூவை பெற்றுத் தரவேண்டுமென்று நினைக்கின்றான். அதில் கலந்து கொள்ள நினைத்து ஆசிரியரைப் பார்க்க செல்லும்போது, அவரோ அதற்கான காலம் முடிந்து விட்டது என்று மறுத்து விடுகின்றார். அலி அவரை ஒருவாறு சமாளித்துத் தன் பெயரையும் சேர்த்துக் கொள்ள வைக்கின்றான். தன் தங்கையிடம் இதைச் சொல்லி தான் எப்பிடியும் அந்தப்பந்தயத்தில் மூன்றாவதாக வந்து, அந்த ஷூவை வாங்கிவிடுவேன் என்று சொல்கின்றான். போட்டி நடக்கும் நாள் வந்தது.அலி எப்போதும் போல் தன் பழைய ஷூவை அணிந்து செல்கின்றான். போட்டியில் அலி, மூன்றாவது இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவன் அலியை கீழே விழச் செய்து விடுகின்றான். மீண்டும் எழுந்து மூன்றாவது இடத்தில் வருவதற்காக வேகமாக ஓடும் அலி, எதிர்பாராமல் முதலாவதாக வருகின்றான். அதற்காக அலிக்கு ஒரு கோப்பையும், பதக்கமும் அளிக்கப் படுகின்றது. அனைவரும் சந்தோசமாக இருக்கும்போது அலி மட்டும் தான் மூன்றாவதாக வர முடியாமல் போனதை நினைத்து அழுகின்றான்.அலி ஏமாற்றத்துடன் வருவதைக் கவனிக்கும் சாரா சோகத்துடன் வேறு வேளையைப் பார்க்க உள்ளே செல்கின்றாள். வீட்டிற்கு வரும் அலி தன் ஷூவை கழற்றுகின்றான், அந்த ஷூ முற்றிலுமாக கிழிந்த நிலையில் இருக்கின்றது. அவனது கால்கள் கொப்பளித்து காணப்படுகின்றன. வலியைப் பொருத்துக்கொண்டு தன் கால்களைத் தண்ணீர்த்தொட்டியில் வைக்கின்றான். அங்கிருக்கும் சிறு மீன்கள் அவன் கால்களின் காயங்களை மொய்க்கின்ற நிலையில் இதயம் வருடும் இசையுடன் படம் நிறைவடைகின்றது.

1997இல் வெளிவந்த இந்த ஈரானிய மொழித் திரைப்படத்தை இயக்கியவர் மஜித் மஜிடி. எளிமையான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்பு, இவைதான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.

அந்த சிறிய வீட்டில் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி எவ்வாறு தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பேச முடியும். இந்த இடத்தில் இயக்குனர், அலியும் சாரவும் தங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி இருவரும் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி பேசுமாறு செய்கின்ற காட்சி கவிதை.அலி எவ்வளவு எடுத்து சொல்லியும் சாரா கேட்காமல் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லபோகின்றேன் என்று அடம்பிடிக்கும்போது, அலி தன் புத்தம்புது பென்சிலை சாராவிடம் தந்தவுடன் அவள் அமைதியாகும் காட்சி, நம் குழந்தைப் பருவத்தைக் கண்டிப்பாக நினைவூட்டும்.

அலியின் ஷூ வை அணிந்து செல்லும் சாரா, தனக்குப் பெரிதாக இருக்கும் அந்த ஷூவைப் பார்த்து, யாரும் கிண்டல் செய்வார்கள் என்று எண்ணி, தன்னை விட உயரமான சிறிமியின் பின்னே மறைந்து கொண்டு தன் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி அருமை.

அது போல தன் ஷூவை போட்டிருக்கும் சிறுமியின் வீட்டிற்கு விறைப்புடன் செல்லும் அலியும் சாரவும், அந்த சிறுமியின் தந்தை ஒரு குருடர் என்றும், அவர்களும் ஏழை என்று அறிந்தவுடன் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசிக்கொள்ளும் காட்சியும் அற்புதம்.

அதுபோல ஓட்டப்பந்தயத்தில் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓடி வந்து எல்லைக்கோட்டைத் தொடும் அலியைத் தூக்கி நிறுத்தும் ஆசிரியரிடம், தான் மூன்றாவதாக வந்துவிட்டேனா என்று கேட்கும் அலியிடம், நீ தான் முதலாவதாக வந்திருகின்றாய் என்று ஆசிரியர் சொல்லும்போது, அலி உடனே கண் கலங்கும் காட்சி அற்புதம். வெற்றிபெற்று பதக்கத்தை வாங்கச் செல்லும்போது அலி, அந்த மூன்றாவது பரிசாக வழங்கப்போகும் ஷூவை பார்த்தவாரே ஏமாற்றத்துடன் செல்லும்காட்சியும் அற்புதம்.

படத்தின் இறுதியில் ஒரு காட்சியில் அலி பந்தயத்தில் வென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, அவர்களின் அப்பா இருவருக்கும் புதிய ஷூ வாங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு வருவதாக ஒரு காட்சி வரும்.

இந்த திரைப்படம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. சமத்துவம், சகோதரத்துவம், என்று சொல்லிக்கொண்டு திரியும் நாம், அதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் அதைக் குழந்தைகளிடம்தான் காணமுடியும் என்று நமக்கு உணர்த்தும் படம்.

வெளியான எல்லா நாட்டிலும் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தப்படம், ஆஸ்கார் விருதிற்கு, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

Sunday, August 2, 2009

காளமேகப்புலவர் பெண்ணிடம் போட்டப் புதிர்.........

ஒரு முறை ஒரு பெண் கவி காளமேகப்புலவரிடம் இதுவரை எங்கும் கேட்டிராத ஒரு பாடலைப் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரும் அப்பெண் விழி விரித்து ஆச்சர்யப்படும் அளவுக்குப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கின்றார்.

அப்படியென்ன பாடலைப் பாடிவிட்டார் என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். அப்பாடலைப் பற்றியே இந்த பதிவில் பேசப் போகின்றோம்.


பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

விளக்கம்:

பூநக்கி என்றால் என்ன என்ற கேள்வி அனைவருக்கும் வருவதில் சந்தேகமில்லை. நாம் அனைவருக்கும் தெரிந்தது பூனை. புலவர் பூனையைக் குறிப்பிடுகிறார் என்றால் அதற்கு இரண்டு கால் தானே என்று யூகிக்கத் தோன்றும். இங்கு தான் புலவர் தன் சொல் நயத்தை மேன்மையாகக் கையாண்டுள்ளார். இங்கு பூநக்கி என்பது பூவை நக்கித் தேனை உறிஞ்சும் தேனீ . அதாவது தேனீக்களுக்கு ஆறுகால் என்பதை அவ்வாறு கூறியிருக்கிறார்.

புள்இனம் என்றால் பறவையினங்கள். அது சரி பறவைகளுக்கு எப்படி ஒன்பது கால். இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். அதாவது 9 * 1/4 = 2 1/4. ஒன்பதைக் காலால் பெருக்கினால் இரண்டே கால் வரும். அதாவது பறவை இனங்களுக்கு இரண்டே கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.

இங்கு யானையை ஆனை என்று கூறியுள்ளார். மேலே கூறியது போல் 17 * 1/4 = 4 1/4. பதினேழை காலால் பெருக்கினால் நாலேகால். அதாவது ஆனைக்கு நான்கு கால்கள் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.


பின்பு அப்பெண்ணைப் பார்த்து, பெண்ணே கேள்(மானே! கேள்!). முண்டகம் என்பது தாமரை மலர். அதாவது தாமரை மலரின் செம்மை நிறத்தை உடையவர் சிவபெருமான். அதே போல் குவளை மலரின் நீல நிறத்தை உடையவர் அன்னை உமையாள். தாமரை மலரின் செம்மை நிறத்தை உடைய சிவபெருமான் தன்னில் சரிபாதியை குவளை மலரின் நீல நிறத்தை உடைய அன்னை உமையாளுக்குக் கொடுத்தது தாமரைப்பூவில் குவளை மலரின் நீல நிறம் படிந்துள்ளது (பூத்ததுண்டு) என்றும். இக்காட்சியைக் காண முடியும் என்றும். அதற்க்கான சான்றுகள் ஏட்டிலோ அல்லது நாட்டிலோ கிடையாது என்றும் கூறியுள்ளார். அதாவது இக்காட்சியை கண்ணால் மட்டுமே காண முடியும். இதற்கான சான்றை எங்கும் கேட்க்க முடியாது என்று பாடலை முடித்துள்ளார்.

பதிவு பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும். கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன. இதே போல் உங்களுக்கும் ஏதாவது பாடல் தெரிந்திருந்தால் கருத்துக்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் . எங்கள் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யவும்.

Saturday, July 25, 2009

பரமசிவனுக்கு ஆறுதலையாம்!...........

பரமசிவனுக்கு ஆறு தலையா? அவர் பையன் முருகனுக்குத் தானே ஆறு தலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வருவதில் ஆச்சர்யம் இல்லை. இவ்வாறு ஒரு பாடலில் சொல்லியிருப்பது நம்ம காளமேகப்புலவர் தாங்க.

அவருக்கும் மட்டும் இல்லாமல் முருகன், விநாயகர், திருமால் மற்றும் சிவனின் பக்தர்களுக்கும் ஆறுதலைன்னு சொல்லியிருக்கிறார். எப்படி பரமசிவனுக்கு ஆறுதலைன்னு யோசித்துக்கொண்டே பதிவைப் படிக்க ஆரம்பிங்க.

சங்கரர்க்கும் ஆறுதலை; சண்முகற்கும் ஆறுதலை;
ஐங்கரற்கும் மாறுதலை ஆனதே - சங்கைப்
பிடித்தோர்க்கும் மாறுதலை; பித்தா! நின்பாதம்
படித்தோர்க்கும் ஆறுதலைப் பார்!


விளக்கம்:
சிவபெருமான் தலையில் கங்கா தேவியைச் (ஆறு) சுமந்திருப்பதால் அவருக்கு ஆறுதலைகள் என்றும், முருகன் ஆறு கமலத்தில்(தாமரை) ஆறு உருவங்கள் ஆகப் பிறந்து பின்பு ஓன்று சேர்ந்ததால் அவருக்கு ஆறுதலைகள் என்றும் பாடியிருக்கிறார்.

ஐங்கரன் என்பவர் விநாயகர். அவருக்கு எவ்வாறு ஆறுதலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். இங்கு தான் புலவர் அவருடைய சொல் நயத்தை கையாண்டுள்ளார். இங்கு அது ஆறுதலை இல்லை மாறுதலை. அதாவது விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறாக யானையின் தலை இருப்பதை மாறுதலை (மாற்றுத் தலை) என்று கூறியுள்ளார்.

சங்கைக் கையில் வைத்துள்ளவர் திருமால். அவருடைய நரசிங்க அவதாரத்தில் அவரது தலை சிங்கத்தின் தலை. கூர்ம அவதாரத்தில் பன்றியின் தலை. அகவே அவருக்கும் மாறுதலை(மாற்றுத்தலை) என்று சொல் நயத்துடன் கூறியுள்ளார். இந்த அடிக்கு இன்னும் ஒரு அர்த்தமும் உள்ளது.

(சங்கைப் பிடித்தோர் - பாற்கடலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷத்தை சிவபெருமான் உண்ணும் பொது உமையாள் அவர் கழுத்தில் உள்ள சங்கைப் பிடித்தார். அப்போது அந்த விஷம் கழுத்தில் பரவியது. கழுத்தில் பரவிய விஷத்தை(சங்கைப் பிடித்தது விஷம்) கக்கிய வாசுகி பாம்பின் தலைவன் ஆதிசேஷன். அவர் திருமாலின் அவதாரம். அகவே திருமாலுக்கு பாம்பின் தலை இருப்பதால் அவருக்கும் மாறுதலை(மாற்றுத் தலை) என்றும் கூறலாம்.)

பித்தா - பித்தன் என்பது சிவனின் பெயர். அதாவது சிவனின் பாதத்தை சரணடைந்தவர்க்கு அவர்கள் அடையும் ஆறுதலைப் பார் என்று வியந்து கூறுவது போல் பாடலை சொல் நயத்துடன் எழுதியுள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.தெளிவு!

சற்றே பெரிய சிறுகதை!
சுவர்க்கடிகாரம் இரவு பத்து மணியைக் காட்டியது. அழுது வீங்கிய கண்களுடன் இருந்த நித்யா டிவியை நிறுத்திவிட்டு தன் அறையிலிருந்து வீட்டின் முகப்பறைக்கு வந்தாள். நவீன் இன்னும் வரவில்லை.

சரி இப்பொது இவர்களைப் பற்றி சிறு அறிமுகம்!

நித்யாவைப் பார்ப்பவர் எவரும் அவளுக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்குமென்று சரியாக கணித்து விடுவர். எவரையும் சீக்கிரம் வசியம் செய்துவிடும் அழகு, ஒல்லியான தேகம். கல்யாணமாகி ஒரு வருடம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள் அவளுக்கும் நவீனிற்கும் தினமும் எதாவது ஒரு விஷயத்தில் மனம் ஒத்துபோகாமல் அடிக்கடி சண்டை தான். அவளுக்கு வாழ்கையின் மீதே ஒரு வெறுப்பு வந்துவிட்டதை நவீனும் கவனிக்காமலில்லை.

நவீன் ஒரு பெரிய கம்பெனியில் சாப்ட்வேர் துறையில் மேனேஜர். பொறுப்புகள் அதிகமான வேலை. சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாது. சில சமயம் வார விடுமுறை நாட்களில் எங்காவது நித்யாவுடன் வெளியில் செல்லும்போது அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து உடனடியாக வரச் சொல்வார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் இவனும் செல்லவேண்டியதாகிவிடும். சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தால் இருவருக்கும் மறுபடி பிரச்சனை தான். அதுபோல் நித்யாவும் சில நேரம் விடுமுறை நாட்களில் அலுவலகம் செல்ல வேண்டியிருக்கும். அன்றைக்கு மட்டும்தான் என்றில்லை, விடுமுறை நாட்களில் இருவரும் ஒன்றாக இருந்தாலும், எதாவது ஒரு சிறு விஷயத்திற்காக பேச ஆரம்பித்து அது மீண்டும் சண்டையில் தான் வந்து முடியும்.இத்தனைக்கும் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்கள்தான். ஒரே கம்பெனியில் தான் வேலை செய்தார்கள். நவீனின் பணியைப் பற்றி முழுதும் தெரிந்தும், இவன் தான் தன் துணையாக வேண்டுமென்று நித்யா, விரும்பி ஏற்றுக்கொண்டாள். கல்யாணத்திற்குப்பின் வேறு கம்பெனியில் இன்னும் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தாள்.

இவ்வளவு அறிமுகம் போதும்.மீண்டும் கதைக்கு வருவோம்.

இன்னும் நவீன் வரவில்லை. எங்கு சென்றிருப்பான் என்று யோசித்தாள். ஒருவேளை அந்த கீதாவை அவள் வீட்டில் இறக்கிவிட்டு அங்கேயே சாப்பிடுகின்றானோ. நித்யா, திருமணம் என்னும் பெரிய குழிக்குள் தெரிந்தே விழுந்து விட்டதாக நினைத்து அழுதாள். சற்று உணர்ச்சிவசப்பட்டவளாய், 'கடவுளே! எனக்கு எதாவது ஒரு வழி சொல்லன்!' என்று புலம்பினாள். தீடீரென்று ஒரு வெளிச்சம். இப்பொது நித்யாவின் எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். சாந்தமான முகம், வெண்மையான உடை, உதட்டில் சிறு புன்னகை, பார்ப்பதற்கு டிவி நாடகத்தில் வரும் சாமியார் போலிருந்தார். நித்யா சற்று பயந்தாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் பேச ஆரம்பித்தாள்.

'நீங்க யாரு? எப்படி வந்தீங்க?'

'நீதானம்மா என்னை அழைத்தாய்.'

'நானா?'

'ஆம். கடவுளே என்றாயே!'

'அப்டினா நீங்க கடவுளா?'

'பாக்க வித்தியாசமா இருக்கீங்க? டிரஸ் கூட வேற மாதிரியிருக்கு. நீங்க எந்த சாமி? அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி, நீங்க உண்மையா சாமி தானா?'

'பரவாயில்லை. சற்று முன் அழுதாலும் உன் கேள்விகள் அனைத்தும் தெளிவாகத் தான் உள்ளன. எனக்கு இது தான் உருவம். உங்கள் பூஜை அறையில் தொங்கும் படங்கள் எல்லாம் நீங்கள் உருவாக்கியக் கற்பனைப் பாத்திரங்கள் தான். உனக்காக எதுவும் சித்து வேலைகள் செய்து காட்ட முடியாது. என்னால் உங்களைப் படைக்க தான் முடியும். மற்றபடி, பாட்ஷா படத்தில் ரஜினி சொல்வதுபோல் வாழ்வது எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது, இன்னும் நீ என்னை நம்பவில்லை என்றால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. எதோ என்னை அழைத்தாயே என்று வந்தேன்.வேண்டாமென்றால் சென்று விடுகிறேன்'

'மன்னிச்சிடுங்க. என் கஷ்டத்த நினச்சு தான் உங்ககிட்ட புலம்பினன்'

'என்ன கஷ்டம்?'

'வாழவே பிடிக்கல'

'திருமணம் ஆகிவிட்டதா?'

'ஒரு வருஷம் முடியப் போகுது'

'அதற்குள், உனக்கு வாழ்க்கை அலுத்து விட்டதா? அல்லது உன் கணவனைப் பிடிக்கவில்லையா?'

'நவீனைப் பிடிக்கவில்லை'

'நவீன்?'

'என் கணவன், காதலனாக இருந்து கணவனாக மாறியவன்.'

'உங்களுக்குள் என்ன பிரச்சனை?'

'அவனுக்கு எப்போதும் வேலைதான் முக்கியம். அதிகம் சம்பாதிக்க வேண்டும்.எனக்காக நேரம் செலவு செய்ய அவனுக்கு மனமில்லை. நானும் தான் வேலைக்கு போறன். ஆனா சீக்கிரம் வரல?'

'ஒருவேளை அவனுக்கு வேலைப்பளு அதிகமோ?'

'அப்டில்லாம் கிடையாது. பணம் தான் முக்கியம் அவனுக்கு. நான் வேலைக்கு போகக் கூடாதாம். வீட்ல இருந்து அவன் அப்பா அம்மாவ நல்லாப் பார்த்துக்கணும். என் பழைய பிரென்ட் கூட போன் பேசக்கூடாது. இப்படி நிறைய கண்டிஷன் போடறான்'

'இப்போதுதான் இப்படி நடந்து கொள்கிறானா?'

'புரியல'

'காதலிக்கும்போது அவன் இவ்வாறுதான் இருந்தானா?

'ஆமா'

'அப்போது உனக்கு இதெல்லாம் தெரியவில்லையா?'

'இல்ல. ஆனா இப்பதான் தெரியுது'

'எத்தனை வருடம் காதலித்தீர்கள்?'

'ஒரு வருடம் தான்'

'அப்படியென்றால் நீ அவனை சரியாக புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. நீ அவனிடம் உன் எதிர்பார்ப்புகளை எடுத்துக்கூறி புரியவைக்கலாம் அல்லவா?'

'அதுக்கு இப்ப நேரமில்ல. எல்லாம் கடந்து போயாச்சு.'

'சரி. என்னதான் செய்வதை உத்தேசம்?'

'விவாகரத்து!'

'அவன் இதற்கு ஒப்புக்கொள்வானா?'

'அதப்பத்தி எனக்கு கவலை இல்ல. அவனும் கூட இப்ப என்னபத்தி பெருசா நினைக்கிறது இல்ல'

'தவறு செய்கின்றாய் மகளே! காதலிக்கும் போது ஒருவரின் நிறைகள் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் வாழும்போது தான் ஒரு சிறு குறை கூட பெரிதாய்த் தெரியும். இப்பொது நீ தெளிவாகயில்லை அதனால் உன்னால் சரியான முடிவெடுக்க முடியாது. உனக்கு தேவை சில காலம் அமைதி.நவீனை விட்டு சிறிது காலம் பிரிந்திரு. அப்போது தான் உனக்கு அவன் தேவை உனக்கு வேண்டுமா வேண்டாமா என்று தெரியும். உனக்காக நான் நவீனிடமும் பேசுகிறேன். அதற்கு பின் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவெடுங்கள்!'

'சரி'

'இன்னும் சில நாட்கள் கழித்து உன்னைப் பார்கிறேன்.அதற்குள் நீ ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கவேண்டும்'

'சரி'

'நான் போய்வருகிறேன். மீண்டும் சந்திப்போம்'

கடவுள் நேரே நவீனின் அலுவலகத்திற்கு சென்றார். அவன் கிளம்பத் தயாராக இருந்தான். தான் நித்யாவின் சொந்தம் என்று அறிமுகம் செய்துகொண்டு அவனிடம் பேசினார். அவனுக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனும் அவரை அழைத்துக் கொண்டு ஒரு உணவகத்திற்கு சென்றான். கடவுள் சாப்பிட மறுத்துவிட்டார். அவன் மட்டும் சாப்பிட ஆரம்பித்து, அப்பிடியே அவரிடம் பேச்சு கொடுத்தான்.

'உங்கள நான் இப்பதான் மீட் பண்றன் சார். நித்யா கூட உங்கள பத்தி எதுவும் சொல்லல'

'அவளுக்கு இன்றைக்கு தான் என் நினைப்பு வந்தது. என்னை அழைத்தாள். அதனால் அவளை சந்திதேன். சிறிது நேரம் பேசிவிட்டு அப்படியே உங்களைப் பார்க்கலாமென்று வந்தேன். உங்களுக்குள் எதோ பிரச்சனை இருப்பதுபோல் தெரிகின்றது. சரி உங்களை சந்தித்துப் பேசலாமென்று வந்தேன்'

'எல்லாத்தையும் சொன்னாளா?'

'ஆம்'

'என்ன பத்தி தான் தப்பா சொல்லிருப்பா. அவ நல்லவ மாதிரி பேசிருப்பாளே'

'அப்படியில்லை, உங்களை நினைத்து வருந்தினாள்'

'சார், நானும் அவளும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணோம்'

'தெரியும்'

'அப்ப கூட லீவ் நாள்னாதான் நாங்க மீட் பண்ண முடியும். நானும் அவளுக்காக அப்ப எந்த கமிட்மென்ட்டும் வச்சிக்கமாட்டன். நல்லா தான் இருந்தோம். இப்ப ஏன் இப்படி நடந்துக்கிரானு தெரியல?. அடிக்கடி ஆபிஸ் போன் பண்ணி என்னபத்தி விசாரிக்கறா.எதாவது ஒரு பொண்ணுகூட பேசினாலும் சந்தேகப்படறா'

'நீங்களும் அவளை எந்த பழைய நண்பர்கள் கூடவும் பேசக்கூடாது என்று சொன்னதாக என்னிடம் கூறினாள்'

'அவ இப்ப அவங்க கூட பேசறதப்பாத்தா எனக்கு முன்ன மாதிரி தெரியல சார்.'

'அப்படியென்றால் உங்களுக்கும் அவள்மேல் சந்தேகம்?'

'ஆமா, அவ இப்பதான் இப்படி மாறிட்டா'

'தவறு உங்களிடமும் உள்ளது. நீங்கள் இவ்வாறு இருந்தால் இதற்கு என்னதான் முடிவு?'

'தெரியல சார்.அவ கூட இப்ப காலம் தள்ள முடியாதுன்னு தெரியுது'

'அப்படியெனில் நீங்களும் விவாகரத்து...'

'ஆமா சார்.அதான் நானும் சொல்ல வந்தன்'

'சரி. உங்களிடமும் நான் அவளுக்கு செய்த உபதேசம் தான் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் இருவரும் சிறிது காலம் தனித்து வாழ்ந்து பின்பு ஒரு முடிவெடுக்கலாமே?'

'அதுக்கு தான் விவாகரத்து !'

'அது நிரந்தரப் பிரிவு. நான் சொல்வது தற்காலிகம் தான். இந்த சிறிது காலப்பிரிவு இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும்.'

'சரி'

'நான் புறப்படுகிறேன்'

'சார் நான் வேணும்னா எங்கயாவது ட்ரோப் பண்ணட்டுமா?'

'நன்றி. நான் பார்த்துக்கொள்கிறேன், இன்னும் சில நாள் கழித்து உங்கள் இருவரையும் சந்திக்கறேன். அப்போது பார்க்கலாம்.வருகிறேன்'

நாட்கள் உருண்டோடின. ஒரு வருடம் முடிந்தது. கடவுள் மீண்டும் வந்தார் நித்யாவைப் பார்க்க. அவள் தன் தாய்வீட்டுற்கு சென்றிருந்தாள்.

'என்ன மகளே, நலமா?'

'வாங்க, உங்கள ரொம்ப நாளா காணோம்னு பார்த்தன்'

'வேறு வேளை இருந்தது. இப்பொது தான் உன் நினைப்பு வந்தது. உடனே உன்னை நாடி வந்தேன். என்ன முடிவெடுத்துள்ளாய்?'

'கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கணேஷ் கொஞ்சம் வாங்க'

அவள் குரலுக்கு ஒருவன் 'வரேன்' என்று சொல்லிகொண்டே அவர்கள் இருவரை நோக்கி வந்தான். அவனை நித்யா கடவுளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'இவர் தான் கணேஷ். கணேஷ் இவர் எங்க தூரத்து சொந்தம். நான் கல்யாணம் பண்ணிக்க போறவர். நான் நீங்க என்ன வந்து பார்த்த அடுத்த நாளே நவீன விட்டு வந்துட்டன். இங்க வேற வேலைல ஜாய்ன் பண்ணன். அங்க தான் கணேஷ் கூட பழக்கம். என்ன பத்தி இவர்கிட்ட எல்லாத்தையும் சொன்னன். இவரும் என்ன புரிஞ்சு என்ன காதலிக்க ஆரம்பிச்சாரு. நானும் சம்மதம் சொல்லிட்டன். நாளைக்கு எங்களுக்கு கல்யாணம்'

கணேஷ் கடவுளைப் பார்த்து 'ஹலோ சார்' என்றான். கடவுள் பதிலுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு ஏறக்குறைய மயக்கம் வந்தவர் போல அங்கிருந்து உடனே கிளம்பினார். என்ன தான் நடக்கின்றது என்று புரியாதவராய் நேரே நவீனைத் தேடிச் சென்றார்.

நவீனின் அலுவலகம் சென்ற போது அவன் வேறொரு பெண்ணுடன் தன் காரில் ஏறப் போனான். கடவுளைக் கண்டதும் 'ஹலோ சார்' என்றான்.

'நவீன் நலமா?'

'பைன் சார். நீங்க எப்படி இவளவு தூரம்?'

'உங்களை சந்திப்பதற்கு தான்'

'நித்யா?'

'தெரியும். பார்த்தேன். அவள் இவ்வளவு சீக்கிரம் இப்படி முடிவு எடுப்பாள் என்று நினைக்கவில்லை'

'அதெல்லாம் நான் மறந்தாச்சு சார். இவ பேரு கீதா, என் கூடதான் வேளை செய்றா. என்ன பத்தி எல்லாம் தெரியும். நாங்க ரெண்டு பெரும் இப்ப காதலிக்கறோம். சீக்கிரம் கல்யாணம். ஒரு நிமிஷம் சார்..' என்று சொன்னவன் கீதாவை அவருக்கு அறிமுகம் செய்தான்.

'சரி நான் போகின்றேன் நவீன்' என்று அங்கிருந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

இனி யார் புலம்பினாலும் அதைக் கேட்கக் கூடாது என்றும், முக்கியமாக யார் வாழ்க்கையிலும் தலையிடக் கூடாது என்றும் தெளிவான முடிவிற்கு வந்தவராய் நேரே 'டாஸ்மாக்' என்று பெயர்ப்பலகை தொங்கும் கடையை நோக்கிச் சென்றார்.

இதுவரை அவர் யார் புலம்பலுக்கும் செவி கொடுப்பதில்லை.


Thursday, July 23, 2009

பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு!

எல்லோருடைய வலைப்பதிவைப் பார்த்தபின்பு நாமும் கதை எழுத வேண்டும் என்று ஆவல் மேலிட்டது. கதை என்றல் காதல் கதை எழுத நமக்கு விருப்பமில்லை. ஏனென்றால் அது நமக்கு வராது. (இம்சை அரசி, திவ்யா போன்றவர்கள் தான் அதற்கு சரி!).

எதாவது நல்ல தமிழ்சினிமாவைப் பார்த்து அதன் உந்துதலால் எழுதலாம் என்றால் எந்தவொரு நல்ல காதல் கதையும் நம் தமிழ் சினிமாவில் இல்லை. (மன்னிக்கவும், ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நம் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கண்டதும் காதல் ரகம் தான் அதிகம்.). சரி அப்டினா சொந்த கதை? வேணாம், அது இன்னும் கொடுமையாக இருக்கும். அதனால் எதாவது வித்தியாசமாக எழுதலாம் என்று நினைத்துள்ளோம். அதற்கு சற்று அவகாசம் தேவைப்படுகின்றதால், இன்னும் ஓரிரு நாட்கள் காத்திருக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

(இப்பவே கண்ண கட்டுதே! ஒரு கதை எழுத எப்படிலாம் வெளம்பரம் பண்ண வேண்டியிருக்கு!!)

Sunday, July 19, 2009

காளமேகப்புலவரின் மோர்ப் பாடல்...........

காளமேகப்புலவரின் முந்தையப் பதிவிற்குப் பயணிகளின் ஆதரவைப் பார்த்து இந்த இரண்டாவது பதிப்பை உங்களுக்காக இங்கு எழுதியிள்ளோம்.

ஒரு முறை காளமேகப்புலவர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆய்ச்சியர் குலப் பெண் மோர் விற்றுக் கொண்டு இருந்தாள். அவருக்குத் தாகமாக இருந்ததால் அப்பெண்ணிடம் சென்று ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார். பின்பு குடித்த மோருக்குப் பணம் கொடுத்தார். அவரை புலவர் என்று அறிந்திருந்த அப்பெண் பணம் வேண்டாம் என்றும் பதிலாகத் தன் மோரைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறும் கேட்டாள்.

அதற்கு புலவர்,
கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்
வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்தபின்
மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!


என்று நகைச்சுவையுடன் பாடல் ஓன்று பாடினார்.

விளக்கம்:
வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயருடன் விளங்குகின்றாய். பின்பு மழையாகப் பொழிந்து நிலத்தில் ஓடும் போது நீர் என்ற பெயருடன் ஓடுகின்றாய். ஆய்ச்சியர் கையில் உள்ள இந்தப் பானையில் வந்தவுடன் மோர் என்று பெயர் பெற்று மூன்று பெயருடன் விளங்குகின்றாயே! என்று வியந்து கூறுவது போல் பாடல் உள்ளது.

அதாவது மோரில் சிறிது தண்ணீர் அதிகமாகக் கலந்து இருந்ததை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

பயணிகளே! இந்த வலைப் பூவில் ஒரு மலராத மொட்டாக உள்ள இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பாராட்டுகள் மட்டுமே எங்களுக்கு உற்சாகம்.

Friday, July 17, 2009

காசேதான் கடவுளப்பா!

ஓவர் பீலா உலகநாதனின் ஒரு டிவி ஷோ விமர்சனம்
பணத்திற்காக உங்கள் குடும்ப மானம் மரியாதையைப் பற்றி கவலைப்படாத மனிதர்களைக் கண்டதுண்டா? அவர்கள் இருபது நம் நாட்டில் தான்.

மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ரீயலிட்டி ஷோ இப்போது நம் நாட்டிலும் வளரத் தொடங்கியுள்ளது. க்ரோர்பதி, கோடீஸ்வரன் வரிசையில் இப்பொது புதிதாய் வந்துள்ள நிகழ்ச்சி 'சச் கா சாம்னா' அதாவது 'உண்மையை சந்தியுங்கள்' என்று பொருள் வரும். (மொமென்ட் ஆப் தி ட்ரூத் என்னும் பிரபலமான நிகழ்ச்சியின் இந்திய காப்பி). இந்த நிகழ்ச்சியில் இருபத்தியொரு கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். மாறாக பொய் சொன்னால் அவர் தோல்வியடைந்து விடுவார். (இதற்காக 'லை டீடக்டர்' என்று சொல்லப்படும் கருவி பயன்படுத்துகிறார்கள். ஒருவர் பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களை வைத்து இது காட்டிகொடுக்கும். இது எந்த அளவிற்கு நம்பத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை).

இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் அதாவது மேஜர், மட்டுமே கலந்து கொள்ளலாம். (குழந்தைகள் பொய் சொல்லாது என்பதற்காக கூட இருக்கலாம்). முதல் கேள்வியில் ஆரம்பித்து படிப்படியாக ஆயிரம் ரூபாய் முதல் இறுதி கேள்வி வந்தால் ஒரு கோடி பரிசு கிடைக்கும். கலந்துகொள்பவர் குடும்பத்தினரும் நிகழ்ச்சியின்போது உடன் இருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டே சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள். உதாரணமாக 'உங்கள் அப்பா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாரா?' என்பன கேட்கப்படும். நீங்கள் இந்த கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் மாறாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் போட்டியிலிருந்து விலகி விடலாம். அதுவரை வென்ற பணம் என்ன உள்ளதோ அதை கொடுத்து விடுவார்கள். இதே கேள்வியை வேறு ஒருவர் நம்மிடம் கேட்டால் கண்டிப்பாக நாம் அஹிம்சையை மறந்து அவரை அடிக்கக்கூட செல்வோம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவ்வாறு செய்ய முடியாது. பல கேள்விகள் இது மாதிரிதான் இருக்கும் என்பது நமக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். இது எந்த அளவிற்கு அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் என்று தெரிந்தும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களை என்னவென்று சொல்வது?இவையனைத்தும் தெரிந்தும் ஏன் கலந்து கொள்ள வேண்டும். காரணம் மிகச்சுலபம், பணம்.

நாம் முன்பு குறிப்பிட்ட இந்தக் கேள்வி ஒருவருக்கு கேட்கப்பட்டது. அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டு விலகிக்கொண்டார்.


ஆசிரியப் பெண்மணி ஒருவர் இந்த நிகழ்ச்சியில் தம் குடும்பத்துடன் .(அம்மா, அப்பா, கணவர்,மகன், அக்கா, அக்காள் கணவர் மற்றும் தம்பி) கலந்து கொண்டார்.

இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

- உங்கள் கணவர் அழகா அல்லது உங்கள் அக்காள் கணவர் அழகா?
- உங்கள் கணவர் சாகவேண்டுமென்று என்றாவது நினைத்ததுண்டா?

(மக்களே நம்புங்கள். இந்த கேள்விக்கு அந்தப் பெண்மணி ஆம் என்று பதில் கூறினார். அந்த பதிலை நிலைப்படுத்த, தன் கணவர் ஒரு காலத்தில் குடிகாரராய் இருந்தார் என்றும், அப்போது இவர் தன் கணவர் இவ்வாறு இருப்பதற்கு சாகலாம் என்றும் நினைத்ததாக எதோ ஒரு காரணத்தை உணர்ச்சிவசப்பட்டு பேசினார்).

அடுத்த கேள்வி

- உங்களுக்கு வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இதற்கு அந்தப்பெண் 'இல்லை நான் அவ்வாறு செய்ய மாட்டேன்' என்று பதில் கூறினார். ஆனால் லை-டீடக்டர் கருவி ஒளி எழுப்பவே 'உங்கள் பதில் தவறு என்றும், தாங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள்' என்றும் தொகுப்பாளர் கூறினார். அதற்கு அப்புறம் அந்தப்பெண் அழுது புரண்டதுதான் மிச்சம். நாளை அந்தப் பெண்ணைப்பற்றி உடன் பணிபுரிபவர்கள்,அவர் பள்ளியில் உள்ள மாணவர்கள் எவ்வளவுக் கேவலமாக நினைப்பார்கள்.சமுதாயத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர் பணத்திற்காக ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்? ஏன் இவ்வாறு அசிங்கப்பட வேண்டும்?


இந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கூட இதில் கலந்து கொண்டு ஒரு கட்டத்தில் உண்மையை சொல்கிறேன் என்று, சச்சினைப் பற்றி அவதூறாகப் பேசிப் பின் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.


ஆனால் இன்றளவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது. மக்கள் பணத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளத் தயாராய் உள்ளார்கள்.


இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களோ, 'இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் நேர்மையையும், புத்திக்கூர்மையையும் பாராட்டுவதாகவும், இதன்மூலம் மேலும் பல மக்கள் உண்மையைக் காப்பாற்ற முன் வருவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்கள்.


இந்த கொடுமையை என்னனு சொல்ல?????


Wednesday, July 15, 2009

கர்மவீரர் காமராஜ்இன்று
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள். தமிழ் கூறும் பதிவுலகில் யாரும் இதைப்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. (இதை எழுதும்போது தான் இட்லிவடையாரின் பதிவை கவனித்தேன்)

தெரிந்தவர்களின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றுக்கு வாழ்த்து சொல்லிப் பதிவு போடும் நாம் கல்விக்கண் திறந்த ஏழைத் தலைவனைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்று நினைத்ததால் இந்தப்பதிவு.

தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, துணிவு, ஒழுக்கம் இவற்றுக்கு உதாரணமாய் ஒருவரை சொல்லமுடியுமென்றால் அவர் காமராஜர் மட்டும் தான். வருடாவருடம் அரசு சார்பில் அவரின் படத்திற்கு மாலை மரியாதை மட்டும் தரப்படும். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முதலிடம் தரலாம். (காந்தி தான் அதிகம் கவனிக்கப்படுகின்றார் - ரூபாய் நோட்டுகளின் மூலம்!). காங்கிரஸ் கட்சி கூட பெயரளவில் இவருக்கு மரியாதையை செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது இன்று சற்று கவனிப்பு கம்மிதான். தேர்தல் சமயத்தில் மட்டும் காமராஜர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுவார். (இது தேவலாம், இன்னும் சிலர் கட்சி விளம்பரத்திற்கு மட்டுமே அவரின் புகைப்படத்தைப் போடுகின்றார்கள் - அதுவும் கூட ஜாதியின் பெயரைச் சொல்லி).

இந்தப்பதிவின் மூலம் காமராஜரின் பெருமைகள் பற்றி நான்கு பேர் தெரிந்துகொண்டாலே போதும். காமராஜர் இல்லாத தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று அறியவேண்டுமென்றால் அவர் முதல்வராக இருந்த போது கொண்டு வந்தத் திட்டங்களைப் பார்த்தாலே புரியும்.

கல்வி:

பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கட்டாய/ இலவச கல்வி.
பகல் உணவுத்திட்டம் (இன்றைய சத்துணவு).

அவரின் ஆட்சிக் காலத்தில் இலவசக்கல்வி மூலம் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

தொழில் மேம்பாடு:

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்காலை
மேட்டூர் காகித தொழிற்சாலை
சங்ககிரி துர்கம் இந்திய சிமெண்ட்ஸ்
அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளான்ட் தொழிற்சாலை

தொழிற்பேட்டைகள்:

கிண்டி, அம்பத்தூர், ராணிபேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி முதலியன.

அணைகள்:

ஆழியார் - பரம்பிகுளம் அணை
அமராவதி அணை
மலம்புழா அணை
மணிமுத்தாறு அணை
சாத்தனூர் அணை
வைகை அணை
கிருஷ்ணகிரி அணை
மேட்டூர் பாசன கால்வாய்
வாலையார் அணை
மங்களம் அணை
ஆரணியாறு அணை


இதுபோக இரண்டு முறை பாரதப் பிரதமரைத் தேர்வு செய்தவர் (லால்பகதூர் சாஸ்திரி & இந்திரா காந்தி). அதனால் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் கே-பிளான் மிகப் பிரபலம். (இந்த காலத்தில் அதற்கு இடமில்லை). அதாவது வயதானவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். இது தான் அந்த பிளான். இதன் அடிப்படையில் முதலவர் பதவியிலிருந்து விலகினார். (இப்போது புரிகிறதா இந்த பிளான் இன்றைக்கு ஏன் வேலை செய்யாது என்று?).

இவ்வளவு செய்தும் மக்கள் அவரை தேர்தலில் தோற்க செய்தார்கள். அதையும் கூடப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். மற்றவர் போல எதிர்கட்சிகள் செய்த சூழ்ச்சி என்றோ, கள்ளவோட்டு என்றோ சொல்லவில்லை. கட்சி வேறு நட்பு வேறு என்று வாழ்ந்து காட்டினார். அதனால் தான் பெரியார் தொடங்கி அண்ணா வரை இவரைப் பாராட்டாதவர் எவருமில்லை. இவரிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே இவரின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.


வாழ்க தமிழ்! வளர்க தமிழர் !!

Sunday, July 5, 2009

இலக்கியத்தில் நோயும் மருத்துவமும்..

நம்ம பஸ்ல இப்போ இலக்கியம் கூடப் பேசப்போறோம் .

ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று ,
முக்காலை ஊன்றி மூவிரண்டு செல்கையில்
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது .
என்று சொல்கிறார்.
அதற்க்கு அந்த மருத்துவர்,
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கி தேய்.
என்று மருத்துவம் சொல்கிறார்.

நோயாளி கூறியதின் விளக்கம் :
முக்காலை ஊன்றி - அவருடைய இரண்டு கால்களுடன் குச்சி ஊன்றி
மூவிரண்டு செல்கையில் - ஆறு நோக்கி போகும் பொழுது
ஐந்து தலை நாகம் அழுத்த கடித்துது - (நெருஞ்சி முள்ளில் ஐந்து பக்கமும் ஐந்து முள் இருக்கும்). அதாவது நெருஞ்சி முள் குத்தியதை பாம்பு கடித்ததாக கூறுகிறார்.

மருத்துவர் கூறியதின் விளக்கம்:
பத்துரதன் - பத்து என்றால் தசம் என்று அர்த்தம். அதாவது தசரதன்.
புத்திரனின் - புத்திரன் என்றால் மகன் . தசரதனின் மகன் ராமன்.
மித்திரனின் - மித்திரன் என்றால் நண்பன். அதாவது ராமனின் நண்பன் சுக்கிரவன்.
சத்துருவின் - சத்துரு என்றால் எதிரி. சுக்கிரவனின் எதிரி வாலி.
பத்தினியின் - பத்தினி என்றால் மனைவி. வாலியின் மனைவியின் பெயர் தாரை.
கால் வாங்கி தேய் - தாரையில் உள்ள காலை எடுத்தால் தரை. அதாவது தரையில் தேய். சரியாகி விடும்.

இந்த பாடலை காளமேகப் புலவர் என்ற சங்க இலக்கியப் புலவர் எழுதியுள்ளார்.
இவர் இது போன்ற பாடல்களிலும் இரு பொருள் தரும் படல்களிகளிலும் சிறப்பு புலமை பெற்று விளங்கியவர். பயணிகளுக்குப் பிடித்திருந்தால் உங்கள் வாசகங்களை பதிவு செய்யுங்கள். இது போன்ற அவருடைய பாடல்களை உங்களுக்காக வலையில் எழுதத் தயாராக இருக்கிறோம்.

Wednesday, July 1, 2009

க்வாட்டர் கோயிந்தும் இலங்கைப் பிரச்சனையும்

நம் பெசன்ட்நகர் பணிமனை அருகேயுள்ள டாஸ்மாக்கில் எப்போதும் சண்டைக்கும் சச்சரவிற்கும் குறைவே இருந்ததில்லை. 'க்வாட்டர்' கோயிந்து அதில் முக்கியமான நபர். ஆள் பக்கா லோக்கல். அரசியல் பேச்சு எங்க வந்தாலும் அங்க இவரு சம்மன் இல்லாம ஆஜராயிடுவாறு.ஆனா இவரு எந்தக் கட்சினு யாருக்கும் தெரியாது. டெய்லி ஒரு கரைவேட்டில இவர பாக்கலாம்.எல்லா கட்சி மீட்டிங்கும் அட்டென்ட் பண்ணுவாரு. ஒரு க்வாட்டர் வாங்கிதரன்னு சொன்னாப் போதும், அந்தக் கட்சிக்கு தற்காலிக கொ.ப.சே இவருதான். ஆனா தேர்தல் சமயத்துல மட்டும் வேளைக்கு ஒரு க்வாட்டர் தேவைப்படும். அது மட்டும் செஞ்சா போதும், இவரு ஓட்டு அவங்களுக்குதான்.


இன்று சட்டசபையில் முதல்வரின் பேச்சைக் கேட்டு நம் கோயிந்து அண்ட் கோ வின் கமெண்ட்ஸ் இதோ...

முதல்வரின் பேச்சு:

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்தச் செய்ய வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.


ஒருவர்:

இப்ப எதுக்கு தீடீர்னு இலங்கை அரசுக்கு சப்போர்ட் பண்றாரு?

கோயிந்து:

ராஜபக்சே அவரோட மந்திரி சபைல எதுனா இலாகா தரன்னு சொல்லிருப்பாரு, அதான் இந்தக் கரிசனம். அதுக்காக நம்ம முதல்வர் குடும்பதோட இலங்கை போயிட்டு வந்தாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல
.
ஒருவர்:

அப்படிலாம் இல்லபா...நம்ம தமிழருக்காக கடுதாசி போடறாரு, போன் பண்றாரு...ரொம்ப சிரமபடராறு பா. இதுக்காச்சும் மத்திய அரசு பதில் சொல்லணும்பா..

கோயிந்து:

ஒரு பதிலும் வராது. இந்த விஷயம் சீரியஸ்னா அவரே நேர்ல போயிருப்பார்ல. அதனால தான் பிரதமரும் உண்மையான நிலவரத்தப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லாம விட்டுடாரு.

Tuesday, June 30, 2009

சினிமா

எப்படியோ வலைப்பதிவு தொடங்கியாச்சு, இனி எதாவது எழுதியே தீரனும்...அப்பத்தான் என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப, நம்ம பஸ்ல போன வாரம் முழுக்க விஜய் அவார்ட்ஸ் பத்திதான் பேச்சு....ஆனா யாரும் அத பாராட்டிப்பேசின மாதிரி தெரியல...சரி விஜய் அவார்ட்ஸ் பத்தி இப்ப எழுதலாம்னு நினைச்சப்பதான், நம்ம சக பதிவர் தமிழ்மாங்கனி அவங்க பதிவுல போதுமான அளவுக்குக் காய்ச்சி எடுத்துட்டாங்க... தமிழ்மாங்கனிக்கு 'அபியும் நானும்' படத்துக்கு விருது கொடுக்கலைனு வருத்தம்... எனக்கு 'அஞ்சாதே' படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்காம விட்டது ரொம்ப வருத்தம்....இந்த விஜய் அவார்ட்ஸ் உண்மையிலயே மக்கள் தேர்ந்தெடுத்தது தானான்னு சந்தேகம் வருது....நிகழ்ச்சித்தொகுப்பாளர் கோபி ரொம்ப சீன் போட்டு யாரையும் ஒழுங்கா பேசவிடாம பண்ணிட்டாரு...அடுத்த வருடம் கண்டிப்பா இந்த நிகழ்ச்சிய பார்க்கக்கூடாது... ( சரி நம்ம வருத்தத்த சொல்லியாச்சு !!!)

'ஓவர்பீலா' உலகநாதன் பக்கம்:


நம்ம பஸ்ல தினம் வரும் பயணி 'ஓவர்பீலா' உலகநாதன் அவர்கள், சினிமா & TV நிகழ்ச்சி, இந்த மாதிரி விஷயத்துல மூழ்கி முத்தெடுத்தவர்...இந்தப்பதிவுல அவர்தான் உங்களிடம் பேசப்போகின்றார்...


நம்ம ஓவர்பீலா உலகநாதன் போன வாரம் 'A Wednesday' ஹிந்திப்படம் பாத்தாராம்...அத பத்தி இனி அவரே சொல்றாரு, படிங்க....

இந்த படத்த பத்தி பெருசா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல!!!!


சாது மிரண்டால் நாடு கொள்ளாது, இந்த பழமொழிதான் இந்த படத்தின் சாராம்சம்...சாதாரண மனிதன் எப்படி தனியொருவனாக நான்கு தீவிரவாதிகளை அழிக்கின்றான் என்பது தான் கதை...நகரின் போலீஸ் உயர் அதிகாரி தான் ஒய்வு பெறுவதற்கு முன்பு, தான் சந்தித்ததிலேயே முக்கியமான வழக்கு என்ன என்பது பற்றி நினைத்துப் பார்ப்பதுபோல் கதை தொடங்குகின்றது...அந்த வழக்கு இதுவரை எங்கும் பதிவாகவில்லை மற்றும் அது ஒரு சாதாரண மனிதனைப் பற்றியது...ஒரு மனிதன் அந்த போலீஸ் உயர் அதிகாரியைத் தொடர்புகொண்டு தான் நகரின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க வேண்டுமானால், தன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்றும் கூறுகின்றான்...அவன் கேட்பது பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் தொடர்புடைய நான்கு முக்கியத் தீவிரவாதிகளை...போலீஸின் உதவி கொண்டே அந்த தீவிரவாதிகளை எப்படி அழிக்கின்றான் என்பதே படத்தின் கிளைமாக்ஸ்...வழக்கம் போல நாயகன் அவர்களைக் கொள்வதற்கு காரணங்கள் கூறுகின்றான்...

படத்தின் பிளஸ்:

நசுரிதீன் ஷா மற்றும் அனுபம் கேர் இருவரின் நடிப்பு
கதையின் நாயகன் தான் ஏன் தீவிரவாதிகளை ஒழிக்க எண்ணினேன் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள்...(இந்த இடத்தில வசனங்கள் அருமை!!!)
படம் நீளம் குறைவு...அதனால் விறுவிறுப்புக் குறையவில்லை

படத்தின் மைனஸ்:

லாஜிக் சுத்தமாக இல்லை
சாதாரண மனிதன் தனிஒருவனாக வெடிமருந்து வாங்கி வந்து வெடிகுண்டு தயார் செய்வது...( இதற்கு நாயகன் இண்டர்நெட்டில் தேடி இதை எல்லாம் கண்டுபிடித்ததாக சொல்கிறார்...சரி என்று ஒத்துக்கொண்டாலும் அவர் எப்படி சுலபமாக RDX வாங்க முடியும் என்பது போன்ற சில கேள்விகள் நம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை )


இந்தப்படத்தின் சாராம்சத்தை ஒத்து நம் தமிழில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன (இயக்குனர் ஷங்கரின் பெரும்பான்மையான படங்கள்) இருந்தாலும் இந்தப்படம் எந்த விதத்திலும் அவற்றிலிருந்து வேறுபடவில்லை...ஏன் நம் ஊரில் மட்டும் மொழி வேறுபட்டாலும் சிந்தனை வேறுபடவில்லை என்று இந்த படங்களின் மூலம் அடிக்கடி நிரூபித்துக் காட்டுகின்றார்கள் என்று புரியவில்லை...

இதை தமிழில் வேறு எடுக்கின்றார்கள். இங்கு கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் நடிக்கின்றார்கள். (இருவரின் நடிப்புக்கும் சரியான தீனி!!).கண்டிப்பாக படத்தின் நீளம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் படம் நன்றாக வரும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ஒரு வேற்றுமொழி படத்தால் உந்தப்பட்டு அதை இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி எடுப்பது என்பது வேறு.அந்த படத்தை அப்படியே ரீமேக் செய்வது என்பது வேறு. நம் ஆட்கள் இரண்டாவதை தான் எப்போதும் செய்வார்கள்Saturday, June 27, 2009

வணக்கம்!!!

வலைப்பதிவுலகின் நண்பர்களே வணக்கம்...

இந்த வலைப்பதிவிற்கு நாங்கள் 23-C என்று பெயர் வைக்கக் காரணம், பெசன்ட் நகர் அப்டினாலே எல்லாருக்கும் முதலில் மனதில் தோன்றுவது பீச் தான்.ஆனா வலைப்பதிவுத் தலைப்பிற்கு அந்த பெயர் கிடைக்காததால் இந்தத் தலைப்பிற்கு மாறிவிட்டோம்.இந்த பஸ் ஏற்கனவே தமிழ் சினிமாவில பிரபலம்.('பார்த்தேன் ரசித்தேன்' படத்துல ஹீரோயின் லைலா இந்த பஸ்லதான் போனாங்க ).

அதனால இப்போது முதல் உங்களுக்கு பெசன்ட் நகர்னா 23-C பஸ் தான் தோணனும்.

பெசன்ட் நகரிலிருந்து கிளம்பும் இந்த பேருந்து, அது பார்க்கும், கவனிக்கும் விஷயங்கள், அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் , பார்த்த படங்கள் (உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை),பணிமனை டீக்கடையில் (முக்கியமா டாஸ்மாக்) நடக்கும் காரசாரமான அரசியல் விஷயங்கள் (லோக்கல் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை), முதலியவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகின்றது.

இதல்லாம் சொல்ற நீங்க யாருன்னு உங்களுக்கு தோணலாம்...அட இந்த 23-C பஸ் டிரைவர்,கண்டக்டர்னு நினைச்சிக்கோங்க...(அப்பதான் நாங்க அடி வாங்காம எஸ்கேப் ஆக முடியும்!!!)

இந்த வலைப்பதிவிற்கு உங்களின் மேலான ஆதரவினைத் தந்து எங்களை வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்...
(பிற்காலத்தில் அரசியல் பிரவேசம் பண்ணும்போது இப்டிதான கேக்கணும்..அதான் இப்பவே முன்னோட்டம் பாத்துக்கறோம்...எப்புடி???)