Tuesday, April 3, 2012

என்னவென்று சொல்வேன் உன்னை....!!!!

நீ என் நிழலென்றேன்
பகலில் மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ என் கனவேன்றேன்
இரவில் மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ என் சுவாசமேன்றேன்
என்னுயிருள்ளவரை மட்டுமே
என்னுடன் இருப்பதாக கூறினாய்...!!!!

நீ எப்பொழுதும்
என்னுடன் இருக்க - என்னில்
என்னவென்று சொல்வேன் உன்னை...!!!!

- நன்றி மோகன் பாபு ராஜா (From Virtusa)

Thursday, November 17, 2011

புத்திசாலி...........!!!!!!!!


நம் காதலுக்காக என் உயிரையும்
இழக்கத் தயார் என்றாள்
என் அன்புக்  காதலி.

நான் இறக்கும் தருவாயில்
நினைவு வந்தது
"என் உயிர் நீ தான்" என்று
அவள் கூறியது.....

-நன்றி நாகராஜ்(Calsoft)

Wednesday, November 16, 2011

நன்னூலும் காதலும்....!!!!!

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே
என்பது நன்னூலின் விதி.
உன்னுடலில் மட்டுமே என்னுயிர் ஒன்றும்
என்பது காதலின் விதி.....!!!

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
என்பது நன்னூலின் விதி.
நீ இல்லையெனில் என்னுயிர் என்னுடலை விட்டோடும்
என்பது தான் காதலின் விதி......!!!

இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் தாராது
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நம்மிருவரைப்பிரித்தால்
என்னுயிர் என்னுடலில் இருக்காதென்பது....!!!

உண்மை+காதல்=உண்மைக்காதல் - இங்கு
உயிரையும் மெய்யையும் இணைக்கத்தான் உடம்படுமெய்.
ஆனால் உன்னையும் என்னையும் பிரிக்கதான்
இந்த மனித இனம்....!!!

Thursday, October 20, 2011

சிவபெருமானுக்கு அரைக்கண்....!

வெகு நாட்கள் கழித்து எங்களுடைய பதிவை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.

இன்று நாம் காளமேகப் புலவரின் ஒரு பாடலைப் பொருளுடன் பதிவாக வெளியிடவுள்ளோம்.

பாடல்:

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!

பொருள்:

சிவபெருமானை அனைவரும் முக்கண் முதல்வன் என்று அழைக்கின்றனர் அல்லவா!. அனால் நமது புலவர் அவருக்கு மூன்று கண்கள் இல்லை. பதிலாக அரைக் கண் மட்டுமே என்று இப்பாடலில் கூறுகின்றார்.

எப்படி என்று யூகிக்கத் தேவையில்லை. அவரே இப்பாடலிலேயே விளக்கமும் அளித்துள்ளார் அர்த்தநாரிஸ்வரர் என்பது சிவனும் உமையாளும் சரிபாதி என்பதை கூறும் ஒரு அவதாரம். அதில் சிவன் உடல் பாதி பார்வதி உடல் பாதி. அகவே மூன்று கண்ணில் ஒன்றரை கண்கள் பார்வதியின் கண்கள். மீதமுள்ள ஒன்றரை கண்களில் ஓன்று வேடன் கண்ணப்பனுடையது.

அகவே சிவபெருமானுக்கு சொந்தமானது மீதமுள்ள அரைக் கண் மட்டுமே என்று நகைச்சுவையாக புலவர் இப்பாடலில் கூறியுள்ளார்.

Thursday, October 21, 2010

கிறுக்கல்கள் - 2


என் இதயம் என்ற
கருவறை சுமக்கின்ற
குழந்தை - நீ...

என்னைச் சுற்றி
கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிகள் -
உன்னைப் பற்றிய
நினைவலைகள்!

நாம் அறிந்த
நம் இதயங்களின்
மொழி - மௌனம்

என் நகங்களில்
நட்சத்திரங்கள் மின்னக்கண்டேன்
நீ புறங்கையில் இட்டமுத்தம்
என் நரம்புகளினஊடே பரவுகையில்.....

என்னுடன் நீ
இல்லை....
இல்லாமல் இருக்கின்றாய்
நானோ இறந்தும்
வாழ்கிறேன்!

கிறுக்கல்கள் - 1



கண்ணீரை துடைப்பது
உன் விரல்கள் என்றால்
அழுகை கூட ஆனந்தம்தான்...

அழுவதற்கு ஆசை
அரவணைப்பது நீ என்பதால்...

உன்னால் ஏற்படும்போது
சோகம் கூட சுகமானது
சுகம் சுகந்தமானது...

என் மனம்
ஆனந்தமடைந்தது
வாழ்த்து அட்டைக்கு
அல்ல!
கொடுத்தது நீ
என்பதால்...


ஒற்றை வார்த்தையும்
கவிதையானது
உனது பெயரை
எழுதுகையில்...

Wednesday, December 9, 2009

இந்திய அணி - சில நாள் முதல்வன்


இந்தியக் கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முன்னெப்போதும் இல்லாத நிலையை அடைந்திருக்கின்றது. நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 -0 என்று வென்றதால் ICC டெஸ்ட் தர வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அது போல் நூறு டெஸ்ட் வெற்றிகளையும் பெற்றுள்ளது. இப்போதுள்ள இந்திய அணி வீரர்களைப் பார்க்கும்போது இந்த வெற்றி எளிது போல் தோன்றலாம்.இந்த வெற்றி அதிகம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் இது எளிதில் பெற்றதல்ல.இந்த அணி உருவாக, பத்தாண்டு காலம் பிடித்துள்ளது. கங்குலி தலைமையில் தூவப்பட்ட விதை இன்று தோனியின் பார்வையில் முளைத்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இந்திய அணி நியூ சிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் போன்ற நாடுகளில் விளையாடி டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
வேற எந்த காலக்கட்டத்திலும் இந்திய அணி இப்படி வெற்றி பெறவில்லை.

90 களின் இறுதி வரை இந்திய அணி உள்ளூரில் மட்டுமே பலவான் என்ற நிலை இருந்தது.
அத்திபூத்தாற்போல் வெளிநாடுகளில் ஓரிரு வெற்றிகள் மட்டுமே கிடைத்தன. இந்திய அணி பெற்ற 100 டெஸ்ட் வெற்றிகளில் 41 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது. அதுபோல் வெளிநாடுகளில் இந்திய அணி அடைந்துள்ள 25 டெஸ்ட் வெற்றிகளில் (ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகளிடம் பெற்ற வெற்றி நீங்கலாக) 13 வெற்றி கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளது.

1999 ல் சூதாட்ட புகாரில் சிக்கி அணி கேப்டன் அசாருதீன் வெளியேற்றப்பட்ட நேரத்தில் சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சுருண்டது. அந்த நேரத்தில் சச்சினும் தலைமைப்பொறுப்பிலிருந்து விலக, கேப்டன் பதவி கங்குலியைத் தேடி வந்தது. கங்குலி செய்த முதல் காரியம் அணியின் மூத்த வீரர்கள் சிலரை வெளியேற்றி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். இதன் பலனாக மினி உலகக்கோப்பை இறுதி வரை இந்திய அணி சென்றது. பின்னர் இந்தியாவிற்கு பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. (உபயம்: லக்ஷ்மண் மற்றும் ஹர்பஜன்). இதுதான் இந்திய அணியின் வெற்றிப்பயணத்தின் முதல் படி எனலாம். ஏனெனில் ஆஸ்திரேலியா அணி அபோது தான் தொடர்ந்து பல டெஸ்ட் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருந்த நேரம். யாராலும் வெல்ல முடியாத அணி என்ற அதன் நிலை சற்றே ஆட்டம் கண்டது.

பின்னர் இங்கிலாந்து சென்ற இந்திய அணி 1 - 1 என்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இந்தத் தொடரின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தான் சேவாக் முதன்முதலில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அணிக்கு சிறந்த அதிரடியான துவக்க வீரர் கிடைத்தார். அதன்பின் ஸ்டீவ் வாவின் கடைசி டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா சென்ற கங்குலி தலைமையிலான அணி 1 - 1 என்று சமன் செய்தது. பின்னர் பாகிஸ்தான் நாட்டில் அவர்களுக்கு ஏதிரான டெஸ்ட் வெற்றி என்று இந்தியா, நன்கு முன்னேறியது.

அணியின் புதிய பயிற்சியாளர் சேப்பலுடன் மோதி கங்குலி வெளியேறிய பின்னர் டிராவிட் கேப்டன் பொறுப்பேற்றார்.பின்னர் வெஸ்ட்இண்டீஸ் சென்ற இந்திய அணி அங்கு நடந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. பின்னர் தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் வெற்றி , இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடர் வெற்றி என்று நன்கு முன்னேறிய இந்தியா பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை இழந்தது. உலகக்கோப்பையில் மோசமான தோல்விக்குப் பின் டிராவிட் வெளியேற கும்ப்ளே கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையில் பாகிஸ்தானிடம் டெஸ்ட் தொடரை வென்றது. பின்பு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நடுவர்களின் மோசமான தீர்ப்புகளால் தொடரை 2 - 1 என்று இழந்தது. இந்த கால கட்டத்தில் தான் சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக அறியப்பட்டனர். இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

பின்னர் தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்காவுடன் 1 - 1 என்று சமன் செய்தது. இங்கு வந்த ஆஸ்திரேலியா அணியை 2 - 0 என்று தோற்கடித்தது, பின்பு நியூசிலாந்து சென்ற இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்றது. இதுவரை தலைமையேற்று விளையாடிய டெஸ்ட் போட்டி ஒன்றிலும் தோற்காமல் வெற்றிக்கேப்டனாக வலம் வருகிறர் தோனி.

இந்த முதலிடம் நிரந்தரம் என்று நாம் அணியினரும் சரி, நாமும் சரி, நினைக்கவில்லை. தென்ஆப்பிரிக்கா நம்மை முந்தும் நிலையிலுள்ளது.மேலும் அடுத்த ஒரு வருடம் இந்தியா, வங்காளதேசத்தை மட்டுமே எதிர்த்து டெஸ்ட் விளையாடவுள்ள நிலையில், தரவரிசையில் நம் அணியின் சரிவும் தவிர்க்க முடியாதது எனத்தெரிகின்றது. இந்த நிலையில் இந்திய அணியை மேம்படுத்த தோனி என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்தப்பத்தாண்டு காலம் டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணியின் பலம், பேட்டிங் மட்டுமே. பௌலிங்கில் கும்ப்ளே, ஹர்பஜன் நீங்களாக ஒருவரும் ஜொலிக்கவில்லை. ஆக இந்தியாவின் பலம், சுழற்ப்பந்து மட்டுமே. ஏனெனில் இந்திய சுழற்ப்பந்து வீரர்கள் வெளிநாடுகளின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களங்களிலும் நமக்கு வெற்றி தேடித் தந்திருக்கின்றனர். சற்று கிரிக்கெட் வரலாற்றைப் புரட்டினால், இந்திய அணி வெற்றி பெற்ற இந்த காலக்கட்டத்தில், வேகப்பந்து வீச்சில் ஒவ்வொரு அணியிலும் சிறந்த இரு வீரர்கள் இருப்பர்.

உதாரணம்:
தென் ஆப்பிரிக்கா - டோனல்ட் - பொல்லாக்
வெஸ்ட் இண்டீஸ் - வால்ஷ் - அம்ப்ரோஸ்
பாகிஸ்தான் - வாசிம் அகரம் - வாகார் யூனிஸ்
ஆஸ்திரேலியா - மெக்ராத் - ப்ரெட் லீ

ஆனால் இந்திய அணியில் ஸ்ரீநாத் சென்ற பின்னர் அந்த இடம் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. நாமும் நிறைய பரிசோதனைகள் செய்து பார்த்தும் சிறந்த இரு வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லை. வரும் ஓரிரு வீரர்களும் சில காலம் மட்டுமே சோபிக்கின்றனர். பின் காயம் மற்றும் உடல் தகுதியின்மை காரணமாக சில காலம் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சுழற்ப்பந்து வீரர்கள் மற்றும் பேட்டிங் இரண்டை மட்டுமே நம்பி இவ்வளவு வெற்றிகள் பெறுவது சுலபமில்லை.வேகப்பந்து வீச்சாளர் பாற்றக்குறையைப் போக்குவது இவரின் முதல் கடமையாகும்.

இனி இந்திய அணி ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடி, வென்று நீருபிக்கும் போது மட்டுமே அது முதலிடம் பிடிக்கவல்ல அணியென்று நினைக்கமுடியும்.

மேலும் சச்சின், டிராவிட், லக்ஷ்மண் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் ஓய்வு பெறப்போகும் நிலையில் அந்த இடங்களை சரியாக நிரப்பும் இளம்வீரர்களைத் தேர்வு செய்து இப்பொது முதல் பயிற்சி அளிப்பது காட்டாயமாகின்றது. இவை அனைத்தும் நிறைவேற்றும் பட்சத்தில் தான் கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பான இடம் பெரும். ஆனால் அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.