Sunday, September 13, 2009

காளமேகப்புலவர் தில்லை சிவகாமி அம்மை மீது பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல்


காளமேகப்புலவர் தில்லையில் சிவகாமி அம்மையைக் கண்டு தருசிக்கும் போது பாடிய வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்தப் பாடலையே இன்று நாம் இந்தப் பதிவில் பயணிகளுக்கு விருந்தாக்குகின்றோம். இப்பாடலை இரட்டுற மொழிதல் (சிலைடை) அணிப் பாடல் என்றும் கூறலாம்.

வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைத் திட்டுவது போல் பாராட்டுவது ஆகும். இந்த அணிப் புலமையில் நமது காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்கள் சிறந்து விளங்கியிள்ளனர்.

பாடல்:

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!


விளக்கம்:

இந்தப்பாடல் வஞ்சப் புகழ்ச்சியாகவும், இரு பொருள் தரும்படியாகவும் அமைந்துள்ளது என்பதனைப் பயணிகளுக்கு முன்பே கூறியுள்ளோம். ஆகவே முதலில் திட்டுவது போல் உள்ள பாடலின் பொருளைப் பார்ப்போம்.

கோன் என்றால் ஆடு மற்றும் மாடுகள் வைத்து மேய்ச்சல் தொழில் செய்யும் இடைக் குல ஆண்களை அழைக்கும் சொல். அதாவது மதுரையில் வசிக்கும் ஒரு மாடு மேய்ப்பவனின் தங்கை வீட்டைவிட்டு வெளியேறி தில்லைநகரில் உள்ள ஆடு மேய்ப்பவனுக்கு மனைவியாகினாள்.

ஆடுகள் மேய்க்க ஆந்தையைப் (கோட்டான்) போல் ஒரு மகனையும் பெற்றாள். இங்கு இடைச்சி என்பது கோன் என்ற வார்த்தை போன்று அந்த இனத்தைச் சேர்ந்த பெண்களை அழைக்கும் வார்த்தையாகும். சிற்றிடைச்சி என்றால் சிறிய இடைகுலப்பெண் என்று பொருள். இவ்வாறு திட்டுவது போல் பாடலைப் புலவர் பாடியுள்ளார்.

ஆனால் இந்தப் பாடலுக்கான உட்கருத்தைப் பார்த்தோமெனில் பாடலின் பொருள் இன்னும் களிப்பாக இருக்கும்.

தமிழில் கோன் என்றால் அரசன் அல்லது ஆண்டவன் என்னும் பொருள்களும் உள்ளது. இங்கு மாட்டுகோன் என்று புலவர் குறிப்பிட்டிருப்பது ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்த கண்ணபிரான் அவர்களயே. அதே போல் தமிழில் ஆடு என்றால் நடனம் என்று மற்றொரு பொருள் உள்ளது. அதாவது ஆட்டுக்கோன் என்று புலவர் குறிப்பிட்டுள்ளது ஆடலரசன் தில்லையில் வாழும் நடராஜமூர்த்தி அவர்களையே.

அதாவது மதுரையில் உள்ள சுந்தரராஜ பெருமாளின் தங்கை மீனாட்சி அம்மை மதுரை நகரை விட்டு சிவகாமி அம்மையாராக தில்லைநகரில் அவதாரம் எடுத்து அந்நகரில் ஆடலுக்குப் பெயர்போன எம்பெருமான் தில்லைவாழ் நடராஜமூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதே முதல் இரண்டு அடிகளின் பொருள்.

அதென்ன குட்டிமரிக்க ஒரு கோட்டானைப் பெற்றாள்?. இங்குதான் நம் புலவர் சொல் விளையாட்டைப் இலாவகமாக கையாண்டுள்ளார். குட்டிமரிக்க என்றால் குட்டிகளைக் கிடையில் அமர்த்துவது என்பது போக, பெருக்கல் குறி போன்று கைகளை குறுக்கே வைத்து தலையில் குட்டிக்கொள்வது (மரித்துக் குட்டுவது ) என்றும் இன்னும் ஒரு பொருள் உள்ளது.

கோட்டானை என்பது கோடு மற்றும் ஆனை என்ற இரண்டு சொற்களின் கூட்டாகும். இங்கு கோடு என்பது ஒரு தந்தம் அல்லது கொம்பு என்று பொருள் தருகிறது. ஆனை என்பது யானையைக் குறிக்கிறது. அதாவது ஒரு தந்தமுடைய யானைமுகமுடைய விநாயகரைக் குறிப்பிடும் சொல்லே கோட்டனை.

அதாவது விநாயகரை வணங்கும் பொழுது அனைவரும் கைகளை பெருக்கல்குறி போல் வைத்து அவரவர் தலையில் குட்டி வணங்குவர். அதையே புலவர் அவ்வாறு வணங்குவதற்கு ஒரு மகனை இந்த உலகுக்குப் பெற்றுத் தந்தாள் என்று மூன்றாவது அடியில் கூறியுள்ளார்.

அதென்ன கட்டிமணி சிற்றிடைச்சி? மணியால் செய்யப்பட்ட மேகலை என்னும் ஒட்டியாணத்தைத் தன் சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவகாமி அம்மையார் என்று தன் கடைசி அடியில் புலவர் அம்பாளை வர்ணித்துள்ளார்.

இவ்வாறு வஞ்சப் புகழ்ச்சி மற்றும் சிலைடை அணிகள் அமைந்த இந்தப்பாடல் பயணிகள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலைப் பயணிகளுக்குப் பதிவாக வெளியிட்டுள்ளோம்.

படித்துப் பிடித்திருந்தால் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

11 comments:

  1. Me the firstae mattum pottukaren :)) Appalikka vandhu padikkaren :D

    ReplyDelete
  2. அருமை!

    Word verification நீக்குதல் நன்று.

    ReplyDelete
  3. @கில்ஸ், @g3

    மிக்க நன்றி!

    ReplyDelete
  4. @ராகவன்

    பாராட்டுக்கு மிக்க நன்றி!


    //Word verification நீக்குதல் நன்று.//

    நீக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. இந்த பாடலை இதற்கு முன்னர் வீரகேசரி பத்திரிகையில் வாசித்த அனுபவம். மீண்டும் வசிக்க கிடைத்தது மகிழ்ச்சி.
    //இந்த அணிப் புலமையில் நமது காளமேகப்புலவர், ஒளவையார், திருவள்ளுவர் போன்ற தமிழ்ப் புலவர்கள் சிறந்து விளங்கியிள்ளனர்.//
    இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வரும் புலவர்.....????

    ReplyDelete
  6. நல்ல இடுகை. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  7. 23-c payanam ineethaagavey irunthathu, nandri! menmeylum nalla payanangalai thodarungal . . .

    ReplyDelete
  8. @வேந்தன் said, @பாஸ்கர் said, @Kanaiyaazhi

    பாராட்டுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  9. Padithen maranthen ennai

    Vazhha nin thondu

    A.Srinivasan

    ReplyDelete