உலக சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படம்.

குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு வித்யாசமானது. அன்பு ஒன்று மட்டுமே அதில் நிறைந்திருக்கும். வெளியே நிலவும் வன்மம், வெறுப்பு, கோபம், வன்முறை முதலியனவற்றுக்கு அங்கு இடமில்லை. நாம் சந்திக்கும் சங்கடங்கள் அவர்களுக்குத் தெரியாது.அதுபோல குழந்தைகளின் சந்தோஷங்கள் நமக்குப் புரிவதில்லை. ஒரு ஊதிய உயர்வு, ஒரு வெளிநாட்டுப் பயணம், நண்பர்களுடன் ஒரு சினிமா, பிடித்த பெண்ணுடன் ஊர் சுற்றுதல், இவை தரும் சந்தோஷங்கள் நம்மால் உணர முடியும். ஆனால் இந்த சந்தோஷங்கள் அனைத்தும் ஒரு சிறு மிட்டாய் அவர்களுக்குத் தந்துவிடும்.எவ்வளவுதான் அவர்களுக்குள் சண்டைகள் இருந்தாலும் அவை வன்முறையில் முடிவதில்லை. அவர்களை சமாதானப்படுத்த ஒரு சிறு விளையாட்டுப் பொருள் போதும்.மொத்தத்தில் அவர்கள் நம்முடனேயே வாழ்ந்து வந்தாலும் அவர்களின் உலகை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. அப்படிப்பட்ட குழந்தைகளின் உலகத்தை, அவர்களின் சண்டையை, பாசத்தை நாமும் ஒரு குழந்தையாக நின்று பார்த்து, புரிந்துகொள்ள உதவி செய்யும் முயற்சி தான் இந்தப்படம்.

அலி,சாரா இருவரும் அண்ணன் தங்கை (இருவரும் சிறியவர்கள் தான்). இவர்களுக்கு ஒரு தம்பி (சின்னஞ்சிறிய குழந்தை), அப்பாவிற்கோ பெரிய உத்தியோகமில்லை. குடும்பம் சற்று வறுமையான குடும்பம்தான். சாராவின் கிழிந்த ஷூவை தைத்து வங்கி வரும் அலி, ஒரு காய்கறிக் கடையில் நுழையும்போது அந்த ஷூ உள்ள பையை ஓரமாக வைத்துவிட்டு கடையில் உள்ளே செல்கின்றான். அப்போது அங்கு வரும் குப்பை அள்ளும் ஒருவன், அந்த ஷூ பையையும் எடுத்துச்சென்று விடுகின்றான். ஷூ தொலைந்த விஷயத்தை சாராவிடம் சொல்லி, தான் அதை எப்படியாவது கண்டுபிடித்துத் தருவதாகவும், அதனால் இந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றான். மேலும் அதுவரை சாரா பள்ளிக்குத் தன்னுடைய ஷூவையே போட்டுச்செல்லுமாறு சொல்கின்றான். அந்த ஊரில் ஆண்களுக்கு மதியம் பள்ளி மற்றும் பெண்களுக்குக் காலையில் பள்ளி. அதனால் தினமும் சாரா தன் அண்ணனின் ஷூ வை போட்டுகொண்டு சென்று, பின் பள்ளி முடிந்தபின் வேகவேகமாக ஓடிவந்து அண்ணனிடம் தருகின்றாள். இருவரின் பள்ளிகளுக்கும் தூரம் அதிகம். எனவே சாரா ஓடிவந்து தருவதற்கு நேரமாகிவிடும். இதனால் அலி பள்ளிக்குத் தினமும் தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். இதற்கிடையில் சாரா தன்னுடைய ஷூ வை தான் படிக்கும் பள்ளியிலேயே ஒரு சிறுமி போட்டிருப்பதைக் காண்கின்றாள். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளின் வீட்டை அடையாளம் கண்டுகொள்கின்றாள். அவளிடமிருந்து எப்படியாவது தன்னுடைய ஷூ வை வாங்கிவிடவேண்டுமென்று சாரா, அலியை அழைத்துக்கொண்டு செல்கின்றாள் . ஆனால் அந்த சிறிமியும் தங்களைப் போல் ஏழையெனத் தெரிந்து பின் வந்து விடுகின்றனர். பிற்பாடு சாரா ஒரு நாள் மறந்துவிட்டு போனப் பேனாவை அந்த சிறுமி சாராவிடம் தருகின்றாள். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர்.
இதனிடையே அலி படிக்கும் பள்ளியில் ஒரு அறிவிப்பைக் காண்கின்றான். அது அந்த ஊரில் நடக்கப்போகும் பள்ளி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம் பற்றிய அறிவிப்பு. அந்த போட்டியில் மூன்றாவது பரிசு ஷூ என்று அறிவிக்கபட்டுள்ளதைப் பார்த்து, தன் தங்கைக்கு எப்படியாவது அந்த ஷூவை பெற்றுத் தரவேண்டுமென்று நினைக்கின்றான். அதில் கலந்து கொள்ள நினைத்து ஆசிரியரைப் பார்க்க செல்லும்போது, அவரோ அதற்கான காலம் முடிந்து விட்டது என்று மறுத்து விடுகின்றார். அலி அவரை ஒருவாறு சமாளித்துத் தன் பெயரையும் சேர்த்துக் கொள்ள வைக்கின்றான். தன் தங்கையிடம் இதைச் சொல்லி தான் எப்பிடியும் அந்தப்பந்தயத்தில் மூன்றாவதாக வந்து, அந்த ஷூவை வாங்கிவிடுவேன் என்று சொல்கின்றான். போட்டி நடக்கும் நாள் வந்தது.அலி எப்போதும் போல் தன் பழைய ஷூவை அணிந்து செல்கின்றான். போட்டியில் அலி, மூன்றாவது இடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது இன்னொரு சிறுவன் அலியை கீழே விழச் செய்து விடுகின்றான். மீண்டும் எழுந்து மூன்றாவது இடத்தில் வருவதற்காக வேகமாக ஓடும் அலி, எதிர்பாராமல் முதலாவதாக வருகின்றான். அதற்காக அலிக்கு ஒரு கோப்பையும், பதக்கமும் அளிக்கப் படுகின்றது. அனைவரும் சந்தோசமாக இருக்கும்போது அலி மட்டும் தான் மூன்றாவதாக வர முடியாமல் போனதை நினைத்து அழுகின்றான்.

அலி ஏமாற்றத்துடன் வருவதைக் கவனிக்கும் சாரா சோகத்துடன் வேறு வேளையைப் பார்க்க உள்ளே செல்கின்றாள். வீட்டிற்கு வரும் அலி தன் ஷூவை கழற்றுகின்றான், அந்த ஷூ முற்றிலுமாக கிழிந்த நிலையில் இருக்கின்றது. அவனது கால்கள் கொப்பளித்து காணப்படுகின்றன. வலியைப் பொருத்துக்கொண்டு தன் கால்களைத் தண்ணீர்த்தொட்டியில் வைக்கின்றான். அங்கிருக்கும் சிறு மீன்கள் அவன் கால்களின் காயங்களை மொய்க்கின்ற நிலையில் இதயம் வருடும் இசையுடன் படம் நிறைவடைகின்றது.
1997இல் வெளிவந்த இந்த ஈரானிய மொழித் திரைப்படத்தை இயக்கியவர் மஜித் மஜிடி. எளிமையான திரைக்கதை, இயல்பான காட்சியமைப்பு, இவைதான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம்.
அந்த சிறிய வீட்டில் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி எவ்வாறு தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பேச முடியும். இந்த இடத்தில் இயக்குனர், அலியும் சாரவும் தங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதி இருவரும் ஷூ தொலைந்த விஷயத்தைப் பற்றி பேசுமாறு செய்கின்ற காட்சி கவிதை.அலி எவ்வளவு எடுத்து சொல்லியும் சாரா கேட்காமல் அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்லபோகின்றேன் என்று அடம்பிடிக்கும்போது, அலி தன் புத்தம்புது பென்சிலை சாராவிடம் தந்தவுடன் அவள் அமைதியாகும் காட்சி, நம் குழந்தைப் பருவத்தைக் கண்டிப்பாக நினைவூட்டும்.
அலியின் ஷூ வை அணிந்து செல்லும் சாரா, தனக்குப் பெரிதாக இருக்கும் அந்த ஷூவைப் பார்த்து, யாரும் கிண்டல் செய்வார்கள் என்று எண்ணி, தன்னை விட உயரமான சிறிமியின் பின்னே மறைந்து கொண்டு தன் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சி அருமை.
அது போல தன் ஷூவை போட்டிருக்கும் சிறுமியின் வீட்டிற்கு விறைப்புடன் செல்லும் அலியும் சாரவும், அந்த சிறுமியின் தந்தை ஒரு குருடர் என்றும், அவர்களும் ஏழை என்று அறிந்தவுடன் ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசிக்கொள்ளும் காட்சியும் அற்புதம்.
அதுபோல ஓட்டப்பந்தயத்தில் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக ஓடி வந்து எல்லைக்கோட்டைத் தொடும் அலியைத் தூக்கி நிறுத்தும் ஆசிரியரிடம், தான் மூன்றாவதாக வந்துவிட்டேனா என்று கேட்கும் அலியிடம், நீ தான் முதலாவதாக வந்திருகின்றாய் என்று ஆசிரியர் சொல்லும்போது, அலி உடனே கண் கலங்கும் காட்சி அற்புதம். வெற்றிபெற்று பதக்கத்தை வாங்கச் செல்லும்போது அலி, அந்த மூன்றாவது பரிசாக வழங்கப்போகும் ஷூவை பார்த்தவாரே ஏமாற்றத்துடன் செல்லும்காட்சியும் அற்புதம்.
படத்தின் இறுதியில் ஒரு காட்சியில் அலி பந்தயத்தில் வென்று விட்டு வீட்டிற்கு வரும்போது, அவர்களின் அப்பா இருவருக்கும் புதிய ஷூ வாங்கி தன் சைக்கிளில் வீட்டிற்கு வருவதாக ஒரு காட்சி வரும்.
இந்த திரைப்படம் நாம் அனைவரும் காண வேண்டிய ஒன்று. சமத்துவம், சகோதரத்துவம், என்று சொல்லிக்கொண்டு திரியும் நாம், அதற்கான அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் அதைக் குழந்தைகளிடம்தான் காணமுடியும் என்று நமக்கு உணர்த்தும் படம்.
வெளியான எல்லா நாட்டிலும் மக்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்தப்படம், ஆஸ்கார் விருதிற்கு, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.