Saturday, August 8, 2009

காளமேகப்புலவரின் யானைப் பொரியல் மற்றும் குதிரைப் பச்சடி......

ஒருவர் காளமேகப்புலவரிடம் கரி என்று தொடங்கி உமி என்று முடியுமாறு ஒரு பாடல் பாடுமாறு கேட்டிருக்கிறார். அதற்க்குப் புலவர், ஒருவன் அவனுடைய அத்தை மகளின் சமையலின் சிறப்பைப் பாடலில் கூறுவது போல் ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடிய அப்பாடலையே இங்கு இன்று பயணிகளுக்காகப் பதிவாக வெளியிடுகின்றோம்.


பாடல்:
கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் - உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக் காண் சீச்சி உமி.

விளக்கம்:
கரி என்றால் யானை. அதாவது அப்பெண் யானையைப் பொரியல் செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். யானைப் பொரியலா? அது எப்படி என்று பயணிகள் யோசிப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதாவது கரி என்றால் யானை; அதேபோல் யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு. இங்கு அத்திக்காய்ப் பொரியல் என்பதையே கரிக்காய்ப் பொரியல் என்று புலவர் கூறியிருக்கிறார்.

கன்னி என்றால் திருமணம் ஆகாதப் பெண். அப்படியென்றால் பெண்ணையா வறுவல் (தீய்த்தல் என்றால் வாணலியில் இட்டு வறுத்தல் என்று அர்த்தம்) செய்தாள்?. கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது. அதாவது வாழைக்காய் வறுவல் என்பதையே கன்னிக்காயைத் தீய்த்தாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியிருக்கிறார்.

பரி என்றால் குதிரை. குதிரையை அப்பெண் பச்சடி செய்தாள் என்று புலவர் கூறியிருக்கிறார். உண்மையில் அப்பெண் குதிரையைப் பச்சடி செய்தாளா?. இங்கும் புலவர் தன் சொல் விளையாட்டை இலாவகமாகக் கையாண்டுள்ளார். பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு. அதாவது மாங்காய்ப் பச்சடி செய்தாள் என்று கூறுவதற்குப் பதில் பரிக்காய்ப் பச்சடி பண்ணாள் என்று கூறுவதாகப் புலவர் கூறியுள்ளார்.

அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம். அதாவது கத்தரிக்காய் நெய் துவட்டல் செய்திருந்தாள் என்பதையே அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்(சமைத்தாள்) என்று புலவர் கூறியிருக்கிறார். எதற்க்காக உருக்கம்உள்ள என்ற வார்த்தையைப் புலவர் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்.

இவ்வாறு அத்தைமகள் சமைத்த உணவில், உப்பு அதிகமாக உள்ளதாகவும் (உப்புகாண் சீச்சி உமி) ஆகவே சீச்சி என்று கூறி உமிழ்ந்ததாகவும் புலவர் பாடலை நகைச்சுவையுடன் முடித்துள்ளார்.

பயணிகளுக்குப் பதிவு பிடிக்கும் என்று நம்புகின்றோம். பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.

குறிப்பு:
கில்ஸ் அவர்கள் விரும்பிக் கேட்ட காக்கைக்கா காகூகை............ பாடல் அடுத்தப் பதிவில் கட்டாயம் இடம்பெறும் என்பதையும் இங்கு கூறிக்கொள்கின்றோம்.

13 comments:

  1. me the firstae :)))

    Ada neyar viruppam section veraya :))) Aasathals dhaan :D

    ReplyDelete
  2. //யானைக்கு அத்தி என்று வேறுஒரு பெயரும் உண்டு//
    //கன்னி என்றால் வாழைக்காய் என்று மற்றும் ஒரு பொருள் உள்ளது//
    //பரி என்றால் மா என்று இன்னும் ஒரு பொருள் உண்டு//
    //அப்பைக்காய் என்றால் அழகிய கத்தரிக்காய் என்று அர்த்தம்//
    //கிராமப்புறங்களில் கத்தரிக்காயை நெய்வடியும் (உருக்கமுள்ள) காய் என்று கூறுவார்கள்//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இது எல்லாமே புது தகவல் எனக்கு :)) இனிமே யார்கிட்டயாவது எனக்கு தமிழ் தெரியும்னு சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்கனும் போல இருக்கே :(

    ReplyDelete
  3. காளமேகம் சிலேடையில் மிகச் சிறந்தவர். அவரது பாடல்களை தொடர்ந்து கொடுங்கள், நண்பர்கள் மகிழ...

    ReplyDelete
  4. தேவகன்னிகை ரம்பா தமிழ்ச்சொல்.
    அரம்பை < அரம்புதல். அரம்பை என்றால் வாழை
    என்றும் பொருள். எனவே வாழைக்கு கன்னிக்காய்
    ஆனது.

    அ + பைக்காய் = அப்பைக்காய்.
    பை = பாம்பின் படம். பைந்நாகம்.
    பாம்பின் படம் போலுள்ள காய் கத்தரிக்காய்.

    அத்தைமகளைச் சீண்டும் சொற்கள்:
    “உப்புக் காண்! சீச்ச்சீ! உமி!”

    நா. கணேசன்

    ReplyDelete
  5. @G3, @மஞ்சூர் ராஜா, @சென்ஷி, @நிகழ்காலத்தில்
    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @நா.கணேசன்,
    புது விளக்கத்திற்கு நன்றி.

    இதேபோல் ஏதாவது விளக்கம் தெரிந்தால் பயணிகள் அனைவரும் கருத்தைப் பதிவு செய்யும் பொழுது குறிப்பிடவும்.

    ReplyDelete
  7. நானும் ஒரு காளமேகம் ரசிகன். நான் படிக்காத பாடல் இது. உங்கள் அனுமதியோடு சேமித்துக் கொள்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  8. kalamega pulavar um andai veetinaro..
    vilakkam ellam thadai indri peruguthe..
    pramadham.

    ReplyDelete
  9. உடலுறவுப் பொருள் ஒன்றும் மறைமுகமாக உள்ளது.
    கரிக்காய் பொரித்தாள் = கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
    கன்னிக்காயைத் தீத்தாள் = கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் = அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.

    உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்= உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
    அத்தைமகள் = அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
    உப்புக்காண் சீ சீ யுமி = இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்று உமிழ்ந்து கொள்வதற்காக

    ReplyDelete
  10. உடலுறவுப் பொருள் ஒன்றும் மறைமுகமாக உள்ளது.
    கரிக்காய் பொரித்தாள் = கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
    கன்னிக்காயைத் தீத்தாள் = கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்

    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள் = அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.

    உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்= உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
    அத்தைமகள் = அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
    உப்புக்காண் சீ சீ யுமி = இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்று உமிழ்ந்து கொள்வதற்காக

    ReplyDelete
  11. இந்தப்பாடல் புதிதாக கேட்க்கிறேன். நன்றி உங்கள் பதிவுக்கு. காளமேக புலவரின் வசைப்பாடல்கள் நல்ல கருத்துக்களைத்தருவது. அவரின் "கார் என்று பெயர் படைத்தாய் ககனகத்துறும்போது" என்ற பாடல் எப்படி நாசூக்காக வைய முடியும் என்று காட்டுகிறது.

    ReplyDelete